சொந்த மகளையே தனது கள்ளக்காதலனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த தாயின் செயல் திருவண்ணாமலை மாவட்டத்தையே அதிரவைத்துள்ளது.
வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் ஏழுமலை 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், சித்ரா தனது 18 வயது இளைய மகளுடன் வசித்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி இரவு சித்ராவும் அவரது மகளும் திடீரென மாயமானார்கள். இது குறித்து சித்ராவின் மூத்த மகள் கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாயமானவர்களின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.
அப்போது, அவர்கள் கேரள மாநிலத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்று தேடுதல் நடத்தியபோது, அங்குள்ள ஒரு தேயிலைத் தோட்டப் பகுதியில் சித்ரா, அவரது மகள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி கந்தன் (31) ஆகிய மூவரும் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மூவரையும் மீட்ட போலீசார், தமிழகம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரிடம் அந்த இளம்பெண் அழுதபடி அளித்த வாக்குமூலம் அதிகாரிகளையே உலுக்கியது. “எனது தாயும் கந்தனும் சேர்ந்து என் வாயில் துணியை வைத்துத் திணித்துக் கடத்தினார்கள். கேரளாவுக்குக் கொண்டு சென்று என்னை மிரட்டி, கந்தன் கட்டாயத் தாலி கட்டினார். அதற்கு எனது தாயே உடந்தையாக இருந்தார். அங்கு வைத்து கந்தன் என்னைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்” என்று அந்தப் பெண் தெரிவித்தார். தனது கள்ளக்காதலைத் தக்கவைத்துக் கொள்ளவும், கந்தனைத் திருப்திப்படுத்தவும் பெற்ற மகளையே அந்தத் தாய் பலிகடா ஆக்கியது விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து, சாதாரண மாயமான வழக்கை ஆள் கடத்தல், கட்டாயத் திருமணம், பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் மாற்றினர். குற்றவாளிகளான தாய் சித்ரா மற்றும் அவரது கள்ளக்காதலன் கந்தன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டு, அவரது மூத்த சகோதரியிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.



