இந்திய ரயில்வே வரலாற்றில் பல தசாப்தங்களாக மர்மமாக நீடித்த ஒரு சம்பவம், 2019ஆம் ஆண்டு திடீரென வெளிச்சத்துக்கு வந்து உலக உளவு அமைப்புகளின் கவனத்தை ஈர்த்தது. ‘பர்மூடா முக்கோணம்’ போல, ரயில்வே பதிவேடுகளில் இருந்து காணாமல் போயிருந்த ஒரு சரக்கு இரயில், பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதே அந்த மர்மம் ஆகும்.
இந்த மர்மம் 1976ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், அகமத்நகரில் இருந்து தின்சுகியாவுக்கு (Tinsukia) சரக்குகளை ஏற்றிச் சென்ற ஒரு சரக்கு இரயில், கனமழை காரணமாக காட்டின் நடுவே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது. வெள்ளம் மற்றும் இரயில் தடத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக, இரயிலின் ஓட்டுநர் (லோகோ பைலட்) இன்ஜினை மட்டும் எடுத்துக்கொண்டு நிலையத்துக்குச் சென்றுவிட்டார்.
அதன் பிறகு, அங்கிருந்த சரக்கு பெட்டிகள் அடங்கிய இரயில் வெள்ள சேதங்களால் ஏற்பட்ட குழப்பத்தில் இரயில்வே பதிவுகளில் இருந்து மாயமாகி, சுமார் 43 வருடங்களாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்துள்ளது. நீண்ட காலமாக மறைந்திருந்த இந்த ரகசியம், 2019 டிசம்பரில் ஒரு எதிர்பாராத திருப்பம் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. நாசா (NASA) தனது செயற்கைக்கோள் கேமராக்கள் மூலம் ஆசியா-ஆப்பிரிக்கா பகுதியின் காடுகளைக் கண்காணித்தபோது, தின்சுகியா காட்டின் அடர்ந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வடிவம் இருப்பதை அவதானித்தது.
அமெரிக்க நிபுணர்கள், அந்த உருவம் இந்தியாவின் இரகசிய ஏவுகணையாக இருக்கலாம் என்று சந்தேகித்ததால், உடனடியாக ரஷ்யா மற்றும் சீனா போன்ற உலக உளவு அமைப்புகளும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த தொடங்கின. இதனால் இந்தியப் பாதுகாப்பு ஏஜென்சிகளும் விழித்துக் கொண்டு, அந்த இடத்தை ஆய்வு செய்யப் புறப்பட்டன.
அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தபோதுதான், அது வேறு எதுவுமில்லை. 1976இல் காணாமல் போன அதே சரக்கு இரயில் என்பது தெரிய வந்தது. இரயில் பெட்டிகள் முற்றிலும் துருப்பிடித்த நிலையில், அடர்ந்த புதர்களாலும் தாவரங்களாலும் சூழப்பட்டு, புதைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும், இந்த சம்பவம் குறித்து 2020ஆம் ஆண்டில் இரயில்வே நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, “அப்படி ஒரு இரயில் காணாமல் போனதற்கோ அல்லது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதற்கோ தங்களிடம் உறுதியான தகவல்கள் இல்லை” என்று ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இருந்தும், இந்திய இரயில்வேயின் இந்த ‘மர்ம ரயில்’ கதை, சமூக ஊடகங்களிலும் பொதுமக்களிடையேயும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.



