இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ ரேட் (வட்டி விகிதம்) குறைப்பைத் தொடர்ந்து, நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) ஆகியவை தங்கள் கடன் வட்டி விகிதங்களை உடனடியாக குறைத்து அறிவித்துள்ளன. இந்த விகித குறைப்புகள் இன்று (டிசம்பர் 15) முதல் அமலுக்கு வருவதால், புதிய மற்றும் ஏற்கனவே கடன் வாங்கியவர்களின் மாதாந்திரத் தவணைகள் (EMIs) குறைந்து, கடன்கள் மலிவாகும் சூழல் உருவாகியுள்ளது.
நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ரிசர்வ் வங்கி பிப்ரவரி 2025 முதல் ரெப்போ விகிதத்தை 125 அடிப்படைப் புள்ளிகள் (Base Points) குறைத்து 5.25% ஆக நிர்ணயித்துள்ளது. கடந்த வாரம், ரிசர்வ் வங்கி நான்காவது முறையாக முக்கிய வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து நடவடிக்கை எடுத்தது.
இதன் தொடர்ச்சியாக, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகளை சந்தித்தார். அப்போது, ரெப்போ ரேட் குறைப்பின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்களை அலைக்கழிக்காமல் உடனே கொண்டு சேர்க்குமாறு அவர் கடுமையாக வலியுறுத்தினார். இதன்மூலம் பொருளாதார செயல்பாடுகள் மேலும் தூண்டப்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலுக்கு இணங்க, பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது EBLR (External Benchmark-based Lending Rate) விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 7.90% ஆக நிர்ணயித்துள்ளது. மேலும், வங்கியின் MCLR விகிதமும் 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு வருட MCLR 8.75% இலிருந்து 8.70% ஆக குறையும். அடிப்படை வட்டி விகிதம் (Base Rate / BPLR) கூட 10% இலிருந்து 9.90% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 15 முதல் அமலுக்கு வந்துள்ளன. இருப்பினும், ஸ்டேட் வங்கி 2 முதல் 3 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்திற்கான நிலையான வைப்பு நிதி வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது.
இதேபோல, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் (IOB) தனது RLLR (Repo Linked Lending Rate)-ஐ 25 அடிப்படைப் புள்ளிகள் (8.35% இலிருந்து 8.10%) குறைத்துள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. மேலும், 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான தவணைக் காலங்களுக்கான அதன் MCLR விகிதத்தையும் 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வட்டி குறைப்புகளால், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் வாங்குவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்கள் எனப் பல தரப்பினருக்கும் நிதிச் சுமை குறையும் என்று வங்கிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.



