உலகிலேயே அதிக ஆயுட்காலம் கொண்டவர்கள் வாழும் நாடாக அறியப்படும் ஜப்பானில், நூறு வயதை கடந்த முதியவர்களின் எண்ணிக்கை கடந்த 2025 செப்டம்பர் நிலவரப்படி 99,763 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 55 ஆண்டுகளாக தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் இந்தப் பட்டியலில், 88 சதவீதம் பேர் பெண்கள் என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜப்பானியர்களின் இந்த நீண்ட ஆயுள் என்பது வெறும் தற்செயலானது அல்ல. அது அவர்களின் பாரம்பரிய உணவு முறை மற்றும் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
ஜப்பானியர்களின் ஆரோக்கிய ரகசியங்களில் மிக முக்கியமானது ‘ஹரா ஹச்சி பு’ (Hara Hachi Bu) எனப்படும் உணவுப் பழக்கம். அதாவது, வயிறு 80 சதவீதம் நிறைந்தவுடனேயே உண்பதை நிறுத்திவிடும் பழக்கத்தை அவர்கள் காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர். ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவுகள் மற்றும் பாரம்பரிய உணவுகளுடன், ஜிம்மிற்கு சென்று செய்யும் உடற்பயிற்சிகளுக்குப் பதிலாக அன்றாட வீட்டு வேலைகள், தோட்டக்கலை மற்றும் நடைப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் உடலை எப்போதும் இயக்கத்திலேயே வைத்துள்ளனர். முதுமையிலும் தங்களுக்கு பிடித்தமான சிறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது அவர்களை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.
பெண்கள் அதிக அளவில் நீண்ட காலம் வாழ்வதற்கு அவர்களின் உயிரியல் ரீதியான ஹார்மோன் பாதுகாப்புகள் ஒருபுறம் இருந்தாலும், நோய் வரும் முன் காக்கும் மருத்துவ விழிப்புணர்வு அவர்களிடம் மிக அதிகமாக உள்ளது. ஜப்பானிய பெண்கள் முதுமைக்காலத்திலும் தங்களுக்குள் வலுவான சமூகத் தொடர்புகளை பேணி வருகின்றனர். நண்பர்களுடன் தினசரி உரையாடுவது மற்றும் குழு நடவடிக்கைகளில் பங்கேற்பது அவர்களை தனிமை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து தற்காக்கிறது.
தனிநபர் பழக்கவழக்கங்கள் மட்டுமின்றி, ஜப்பான் அரசின் மிகச்சிறந்த பொது மருத்துவக் காப்பீடு மற்றும் தடையற்ற சுகாதாரச் சேவைகளும் இதற்குப் பெரும் பலமாக உள்ளன. நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் அரசின் கட்டமைப்பு, அந்நாட்டை ஒரு முதியோர் சொர்க்கமாக மாற்றியுள்ளது. ஒட்டுமொத்த உலகிற்கும் ஜப்பானின் இந்த முதியோர் எண்ணிக்கை உயர்வு, ஒரு ஆரோக்கியமான வாழ்வியலுக்கான பாடமாக திகழ்கிறது.



