தமிழக கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்ப கனவுகளுக்கு சிறகுகளை விரிக்கும் வகையில், ‘உலகம் உங்கள் கையில்’ எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 5-ஆம் தேதி தொடங்கி வைத்தார். சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு உயர்தர மடிக்கணினிகளை வழங்கும் இத்திட்டம், டிஜிட்டல் யுகத்தில் தமிழக இளைஞர்களை உலகளாவிய போட்டிக்குத் தயார் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இதற்காக 2025-26 நிதிநிலை அறிக்கையில் ரூ.2,000 கோடியைத் தமிழக அரசு பிரத்யேகமாக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம் என அனைத்துத் துறை சார்ந்த மாணவர்களுக்கும் உலகத் தரத்திலான டெல் (Dell), ஏசர் (Acer), ஹெச்பி (HP) போன்ற நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. தொழில்நுட்ப ரீதியாக இவை மேம்பட்ட Intel i3 அல்லது AMD Ryzen 3 பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி (SSD) நினைவகம் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளன.
மேலும், மாணவர்களின் கல்விப் பணிகளுக்காக எம்எஸ் ஆபீஸ் 365 (MS Office 365) மற்றும் நவீனத் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த ‘பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ’ (Perplexity Pro) மென்பொருளின் 6 மாத சந்தாவும் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இரண்டு கட்டங்களாக மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்க திட்டமிட்டுள்ள அரசு, முதற்கட்டமாக நடப்பாண்டில் 9 லட்சத்து 60 ஆயிரம் பயனாளிகளுக்கு இதனை வழங்கி வருகிறது.
அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மற்றும் கல்வித் தேவைக்காக மடிக்கணினி வாங்க இயலாத மாணவர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இது வெறும் கல்வி உபகரணம் மட்டுமல்லாமல், மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு டிஜிட்டல் நுழைவு வாயிலாகவும் பார்க்கப்படுகிறது.
திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளங்களில் உலவும் சில போலி தகவல்கள் குறித்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் மடிக்கணினி பெற விண்ணப்பிக்கலாம் என்று ஒரு போலி லிங்க் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்துத் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தகவல் சரிபார்ப்பகம் (TN Fact Check) வெளியிட்ட அறிக்கையில், “மடிக்கணினி பெற விண்ணப்பிக்க சொல்லி பரப்பப்படும் அந்த லிங்க் முற்றிலும் மோசடியானது; அதைப் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பகிரவோ அல்லது கிளிக் செய்யவோ வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளது. மடிக்கணினி விநியோகம் அந்தந்த கல்லூரிகள் வாயிலாக முறைப்படி நடைபெறும் என்பதால், இத்தகைய இணையதள மோசடிகளில் சிக்கி மாணவர்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



