ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாத மாவட்ட கூடுதல் ஆட்சியரின் செயலால் உத்தரகண்ட் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டம் புத்லகாட் பஞ்சாயத்து தேர்தலில், பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை உத்தரகண்ட் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குஹநாதன் நரேந்தர் மற்றும் ஆலோக் மஹரா ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் வாக்குப்பதிவு அலுவலராக செயல்பட்ட மாவட்ட கூடுதல் ஆட்சியர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது, “புகார் அளிக்கப்பட்ட பிறகும் ஏன் தவறான நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படவில்லை?” என நீதிபதிகள் கேட்டனர். இதற்கு அவர் ஹிந்தியில் பதிலளித்தார். அதற்குப் பதிலாக நீதிபதிகள், “ஏன் ஆங்கிலத்தில் பதிலளிக்கவில்லை?” எனக் கேட்டனர். அதற்கு அவர், “ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் சரளமாகப் பேச இயலாது” என்று தெரிவித்தார்.
இந்த பதில் நீதிபதிகளை அதிருப்தியடையச் செய்தது. தொடர்ந்து, “ஆங்கிலத்தில் புலமை இல்லாத ஒருவர் எப்படி ஒரு மாவட்ட நிர்வாக பொறுப்பை திறமையாக மேற்கொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாநில தலைமைச் செயலர் மற்றும் மாநில தேர்தல் ஆணையரிடம் விளக்கம் கோரியுள்ளனர். இந்த சம்பவம், நிர்வாகத்தில் ஆங்கில மொழிப் புலமை தொடர்பாக புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.
Read more: தினமும் ஒரு கைப்பிடி இதை சாப்பிட்டால் உங்கள் மூளை கணினி போல வேலை செய்யும்..!!