காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள உலகளந்த பெருமாள் திருக்கோவில், வைஷ்ணவ சமயத்தில் தனித்துவம் வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. காரணம், திருக்காரகம், திருநீரகம், திருஊரகம், திருக்கார்வானம் எனும் நான்கு திவ்ய தேசங்களும் ஒரே வளாகத்திற்குள் அமைந்திருப்பது. 108 திவ்ய தேசங்களில் இத்தகைய சிறப்பு பெற்ற ஒரே தலம் இதுவே.
திருக்கார்வானம் திவ்ய தேசம்: இந்த நான்கு திவ்ய தேசங்களில் திருக்கார்வானம், 108 திவ்ய தேசங்களில் 53வது தலம். திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். மேகங்கள் சூழ்ந்த வானத்தை குறிக்கும் வகையில் பெருமாள் திருக்கார்வானப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இத்தல பெருமாள் வானத்தை அளந்த போது காட்சி கொடுத்ததால் கார்வானப் பெருமாள் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தல சிறப்புகள்: எளிமை, கருணை, எங்கும், எல்லோருக்கும் என்ற நான்கு பரந்து விரிந்த குணங்களை விளக்கும் வகையில் ஒரே தலத்தில் நான்கு திருநாமங்களுடன் பெருமாள் காட்சி தருகிறார். இத்தல பெருமாள் “கார்வானத்துள்ளாய் கள்வா” என திருமங்கையாழ்வார் பாடியதால், கள்வர் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர் கார்வானப் பெருமாள் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
இத்தலத்தில் பார்வதி தேவியும் பெருமாளை வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. உலகளந்த பெருமாள் சன்னதிக்கு எதிரில் ஆஞ்சநேயர் தனித்துவமாக பின்புறக் கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன் கரங்களில் அஞ்சலி ஹஸ்தம் செய்து பெருமாளை வணங்கும் நிலையில் காட்சி தருகிறார். ஆணவம் நீங்க திருக்கார்வானப் பெருமாளிடம் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. விருப்பம் நிறைவேறியவர்கள் திருமஞ்சனம் செய்து, புதிய வஸ்திரம் சாத்தி வழிபடுவது பாரம்பரியமாக உள்ளது. வைகுண்ட ஏகாதசி, திருவோணம் போன்ற வைஷ்ணவ திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
Read more: பெரும் சோகம்.. தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வீட்டில் மரணம்.. நாளை இறுதி சடங்கு..!



