நேபாளத்தை இந்தியா உடன் இணைக்க ஒருமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த வாரம் முழுவதும் நேபாளம் தான் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளது.. சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான Gen Z இளைஞர்கள் ஒன்று கூடி நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில் ஒட்டுமொத்த நேபாளும் பற்றி எரிந்தது.. மேலும் ஊழல் அரசியல்வாதிகள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்..
மேலும் நாடாளுமன்ற கட்டிடம் போன்ற முக்கியமான கட்டிடங்களுக்கும் தீ வைத்தனர்.. ஆளும் அரசு கவிழ்க்கப்பட்ட நிலையில் பிரதமர் கே.பி சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.. இதையடுத்து தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம் உள்ளது.. மேலும் இடைக்கால அரசின் தலைவராக தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேபாளம் நமது அண்டை நாடு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. ஆனால் நேபாளத்தை இந்தியா உடன் இணைக்க ஒருமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? 1950களின் முற்பகுதியில், நேபாள மன்னர் திரிபுவன் பீர் பிக்ரம் ஷா, நேபாளத்தை இந்தியாவுடன் இணைக்க முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த வாய்ப்பை நிராகரித்து, நேபாளம் ஒரு சுதந்திர நாடாகவே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த தகவலை, முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது ‘தி பிரசிடென்ஷியல் இயர்ஸ்’ என்ற நினைவுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
‘எனது பிரதமர்: வெவ்வேறு பாணிகள், வெவ்வேறு மனநிலைகள்’ என்ற தலைப்பிலான அத்தியாயத்தில், நேபாளத்தில் ராணா சர்வாதிகாரம் முடிவுக்கு வந்த பிறகு, நேபாளம் இந்தியாவின் ஒரு மாகாணமாக மாறலாம் என்று மன்னர் திரிபுவன் நேருவிடம் பரிந்துரைத்தார்.. இருப்பினும், நேரு அந்த யோசனையை நிராகரித்து, நேபாளத்தின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
நேருவின் இடத்தில் இந்திரா காந்தி இருந்திருந்தால், 1975 ஆம் ஆண்டு சிக்கிமை இந்தியாவுடன் இணைத்தது போலவே, இந்த திட்டத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்றும் பிரணாப் முகர்ஜி எழுதி உள்ளார்.
அப்போது நேபாளத்தின் அரசியல் சூழல்
1846 முதல் 1951 வரை, நேபாளத்தை ராணா வம்சத்தினர் ஆட்சி செய்தனர்.. இது நாட்டை உலகின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தியது. 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கும், 1949 இல் சீனப் புரட்சிக்கும் பிறகு நிலைமை மாறியது, இது பிராந்தியம் முழுவதும் அரசியல் இயக்கங்களை பாதித்தது.
1951 ஆம் ஆண்டில், மன்னர் திரிபுவன் நாடுகடத்தலில் இருந்து நேபாளத்திற்குத் திரும்பி ஒரு அரசியலமைப்பு முடியாட்சியைத் தொடங்கினார், இது ஜனநாயகத்திற்கு வழி வகுத்தது. இந்த இடைக்கால காலகட்டத்தில்தான் நேபாளத்தை இந்தியாவுடன் இணைக்கும் யோசனையை அவர் முன்வைத்தார். இருப்பினும், நேபாளம் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக தனது சொந்த பாதையை உருவாக்க வேண்டும் என்று நேரு கூறிவிட்டார்..
Read More : ஏமனில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!. 35 பேர் பலி; 130க்கும் மேற்பட்டோர் காயம்!