ஆந்திர மாநிலம் தனுக்கு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன். வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜா என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. சத்தியநாராயணன் தொழில் காரணமாக எப்போதும் நீதிமன்றம், வேலை என்று சென்றுவிடுவதால், ஸ்ரீஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
அப்போது, ஸ்ரீஜாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த, தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர் சுரேஷ் என்பவருடன் மீண்டும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் திருமணத்திற்கு மீறிய கள்ளக்காதல் உறவாக மாறியது. இதனால், சத்தியநாராயணன் இல்லாத நேரத்தில் ஸ்ரீஜா அடிக்கடி சுரேஷை வீட்டுக்கு வரவழைத்து தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
மனைவியின் இந்த நடவடிக்கையை அறிந்த சத்தியநாராயணன், அவரை உடனடியாக கண்டித்துள்ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து சுரேஷுடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சத்தியநாராயணன், ஒருநாள் தனது மனைவியை சரமாரியாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.
அப்போது, கள்ளக்காதல் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர நினைத்த சத்தியநாராயணன், ஒரு பயங்கரமான சதித்திட்டத்தை வகுத்துள்ளார். சத்தியநாராயணன் கத்தியைக் காட்டி மிரட்டி, ஸ்ரீஜாவை வைத்தே சுரேஷைத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த சுரேஷுக்காக ஆட்களுடன் காத்திருந்த சத்தியநாராயணன், அவரை சரமாரியாக கத்தியால் குத்தி சம்பவ இடத்திலேயே கொடூரமாக கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு, சுரேஷின் உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, அருகில் ஓடும் கோதாவரி ஆற்றில் வீசியுள்ளார். அதன் பின்னர், எதுவும் நடக்காதது போல, அவர் வழக்கம்போல் தனது வேலைகளைத் தொடர ஆரம்பித்துள்ளார். சுரேஷை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் அவரை தேடி வந்தனர்.
அப்போது ஆற்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்த சாக்கு மூட்டை குறித்து கிடைத்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூட்டையைக் கைப்பற்றினர். அதைப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே அழுகிய நிலையில் சுரேஷின் சடலம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
சுரேஷின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில், கடைசியாக அவர் ஸ்ரீஜாவின் வீட்டில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஸ்ரீசாவிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அவரது கணவர் சத்தியநாராயணன்தான் இந்தக் கொலையை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, போலீசார் ஸ்ரீஜா மற்றும் வழக்கறிஞர் சத்தியநாராயணன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்த கொலைக்கு தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.