நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே காதலனுடன் செல்ல விருப்பம் தெரிவித்த இளம்பெண்ணை தந்தை கண்முன்னே காரில் கடத்தி, ஓடும் காரிலேயே காதலன் தாலி கட்டிய சினிமா பாணி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டி சோலூர்மட்டம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (20) மற்றும் மணிகண்டன் (25) ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அப்போது காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில், மகேஸ்வரி மீண்டும் தனது பெற்றோருடனேயே செல்ல சம்மதித்தார். இதையடுத்து, அவரைத் தாளவாடியில் உள்ள உறவினர் வீட்டில் தற்காலிகமாக அவரது பெற்றோர் தங்க வைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை தாளவாடியில் இருந்து மகேஸ்வரியை தந்தை ராஜு தனது ஊருக்கு அழைத்துச் செல்வதற்காகப் பண்ணாரி அம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே காத்திருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்றில் இருந்து இறங்கிய இருவர், ராஜுவின் கண்முன்னேயே மகேஸ்வரியைக் காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும், அது கடத்தல் கும்பல் என்று கருதி காரைத் துரத்திச் சென்றனர்.
புது குய்யனூர் அருகே கார் ஒரு மரத்தில் மோதி நின்றபோது, பொதுமக்கள் காரில் இருந்தவர்களைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்துச் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில், தான் ஊருக்குக் கிளம்பும் தகவலை மகேஸ்வரி ரகசியமாகத் தனது காதலன் மணிகண்டனுக்குத் தெரிவித்ததும், அதன்படியே மணிகண்டன் தனது நண்பருடன் வந்து மகேஸ்வரியை அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.
மேலும், கார் சென்று கொண்டிருக்கும் போதே மணிகண்டன் மகேஸ்வரிக்குத் தாலி கட்டியதும் உறுதியானது. இறுதியில், “நான் மணிகண்டனுடன் செல்லவே விரும்புகிறேன்” என்று மகேஸ்வரி திட்டவட்டமாகத் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் சட்டப்பூர்வமான நடைமுறைகளுக்குப் பின் இருவரையும் ஒன்றாக அனுப்பி வைத்தனர்.
Read More : பெண்களே..!! தொழில் தொடங்க விருப்பமா..? தமிழ்நாடு அரசு கொடுத்த செம வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!



