உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலை மற்றும் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் கிடந்தது குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். இந்தச் சம்பவம் தொடர்பாக, 34 வயதான பேருந்து ஓட்டுநர் ஒருவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, நவம்பர் 5ஆம் தேதி குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. அந்தப் பேருந்து, பரோலாவை சேர்ந்த மோனு சிங் என்ற மோனோ சோலங்கி என்ற ஓட்டுநருக்கு சொந்தமானது என்பதும் கண்டறியப்பட்டது.
உயிரிழந்தவர் பிரீத்தி யாதவ் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மோனு சிங்குக்கும் பிரீத்திக்கும் நீண்ட காலமாகவே தகராறு இருந்து வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. மோனு சிங்குக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்பம் இருந்த நிலையில், பிரீத்தியுடன் அவர் திருமணம் மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.
கைதான மோனு சிங் அளித்த வாக்குமூலத்தின்படி, பிரீத்தி யாதவ் அடிக்கடி அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால், தனது சம்பாத்தியத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர் பிரீத்திக்கு கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், பணம் கொடுக்க மோனு சிங் மறுத்தபோது, தங்கள் உறவு குறித்து அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளிடம் சொல்லி விடுவதாக பிரீத்தி மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்கு பயந்து பணம் கொடுத்த மோனு சிங், ஒரு கட்டத்தில் தன்னால் பணம் கொடுக்க முடியவில்லை என்பதால், பிரீத்தியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பிரீத்தியை அவரது வீட்டில் இருந்து தனது பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் ஒரு சாலையோர உணவகத்தில் நிறுத்தியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சியில் இருந்த மோனு சிங், கூர்மையான ஆயுதத்தால் பிரீத்தியை தாக்கியுள்ளார். கொலையின் வீரியம் மற்றும் கொடூரம் மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பிரீத்தியின் தலையை துண்டித்ததுடன், உடல் அடையாளம் காணப்படுவதை தடுப்பதற்காக இரண்டு கைகளையும் வெட்டியுள்ளார்.
பின்னர், சடலத்தை வாய்க்காலில் வீசியுள்ளார். தலை மற்றும் வெட்டப்பட்ட கைகளை காசியாபாத் பகுதிக்கு எடுத்துச் சென்று, பேருந்தின் அடியில் நசுக்கி அப்புறப்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர செயல் குறித்து போலீசார் மோனு சிங்கிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



