கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா இந்திரா நகரைச் சேர்ந்த 44 வயதான வீரண்ணாவுக்கும், அவரது மனைவி சிவம்மாவுக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 10 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு எச்.டி. கோட்டை தாலுகாவைச் சேர்ந்த பலராம் என்பவருடன் சிவம்மாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கள்ளக்காதல் உறவு நாளுக்கு நாள் நீடித்த நிலையில், இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிவம்மாவுக்கும் பலராமுக்கும் இடையிலான இந்த கள்ளக்காதல் விவகாரம், கணவன் வீரண்ணாவுக்கு தெரியவந்தது. இதனால், கணவன் – மனைவி இடையே தினந்தோறும் சண்டைகள் வெடித்தன.
இந்த சண்டைகள் அதிகரிக்கவே, வீரண்ணா கிராமத்தில் உள்ள பெரியவர்களிடம் முறையிட்டுள்ளார். பெரியவர்கள் சிவம்மாவையும் பலராமையும் கண்டித்து, இனி இப்படி செய்ய கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். இருப்பினும், இருவரும் தங்கள் கள்ளக்காதல் உறவை கைவிடாமல் ரகசியமாக தொடர்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று சிவம்மா தனது கள்ளக்காதலன் பலராமுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட வீரண்ணா, ஆத்திரமடைந்து மனைவியுடன் மீண்டும் சண்டை போட தொடங்கினார். சண்டை முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சிவம்மா, கணவன் என்றும் பாராமல் அவருடைய மர்ம உறுப்பில் பலமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலால், வீரண்ணா அங்கேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவன் இறந்ததை அறிந்த சிவம்மா, பதற்றத்தில் ஒரு கொடூர நாடகத்தை அரங்கேற்ற முயன்றார். தனது சேலையினால் கணவரின் உடலை தூக்கில் தொங்கவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஊர் மக்களிடம் நாடகமாடியுள்ளார். வீரண்ணா இறந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில், சிவம்மாவுக்கும் பலராமுக்கும் இருந்த கள்ளக்காதல் விவகாரம் குறித்து தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மனைவி சிவம்மாவிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கணவனைக் கொலை செய்தது அவர்தான் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, சிவம்மாவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பலராம் தலைமறைவாகிவிட்டதால், அவரைக் கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



