கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லி செட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் 39 வயது வடமாநிலப் பெண் ஒருவருக்கு கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே வசித்து வந்த ரமேஷ்குமார் (34) என்ற ஓட்டுநருக்கும், அந்தப் பெண்ணுக்கும் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டது.
இச்சம்பவத்தை அறிந்த ரமேஷ்குமாரின் மனைவி, அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, காவல்துறை இருவரையும் எச்சரித்து அனுப்பியதோடு, அந்தப் பெண் ரமேஷ்குமாருடனான உறவைத் துண்டித்துவிட்டு வேறு இடத்திற்கு சென்று குடியேறினார்.
இந்நிலையில், அந்தப் பெண் அச்சம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ்குமார், மீண்டும் தன்னுடன் பழகுமாறு அவரை வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அப்பெண், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த ரமேஷ்குமார், அப்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளார்.
பின்னர், அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்துத் தன் தலையில் ஊற்றிக்கொண்டு, “என்னுடன் பேச மறுத்தால் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்வேன்” என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் உடனடியாக அன்னூர் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், ரமேஷ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அப்போது, ரமேஷ்குமார் தனது கையில் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து, “என் அருகில் வந்தால் என் மீது தீ வைத்துக்கொண்டு, உங்கள் அனைவரையும் கட்டிப்பிடித்துக் கொன்று விடுவேன்” என்று போலீஸாரையும், அந்தப் பெண்ணையும் மிரட்டி அச்சுறுத்தினார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, இறுதியில் போலீஸார் ரமேஷ்குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.



