“மதுரை மாநாடு என்னைத் திக்குமுக்காடச் செய்துள்ளது.. 1967, 77 போல் மாற்றம் நடக்கும்..” விஜய் நம்பிக்கை!

tvk vijay nn

மதுரை மாநில மாநாட்டிற்கு நன்றி தெரிவித்து விஜய் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் “ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,வணக்கம். மகோன்னதம் கொண்டு மனம் நிரம்பித் ததும்பி வழியும் மறக்க முடியாத் தருணங்கள் தந்த மதுரை மாநாட்டு வெற்றிக்கான நன்றிக் கடிதம் இது. விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்னை நெகிழ வைத்தது. ஆனால், மதுரையில் நிறைவுற்றிருக்கும் இரண்டாவது மாநில மாநாடான ‘வாகைசூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்னைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இந்த அளவு பேரன்பு காட்டும் உங்களை என் உறவுகளாகப் பெற என்ன தவம் செய்தேனோ? கடவுளுக்கும் மக்களுக்கும் என் மனத்தின் ஆழத்திலிருந்து கோடான கோடி நன்றி.


சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில், சத்திய நீதி காத்த மதுரையில், உரிமை காக்கும், உறவு காக்கும் மதுரையில் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் வெற்றி என்பது, உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும் பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.

மதுரையில் கடல் வந்து புகுந்தது போல இருந்தது, நம் மாநாட்டுக் காட்சி. கபட நாடக மற்றும் பிளவுவாத சக்திகளை அரசியல் மற்றும் கொள்கை அளவில் நின்று உறுதியாக நாம் எதிர்த்ததைக் கடல்கள் சேர்ந்து கை தட்டியதைப் போல மக்கள் மனப்பூர்வமாக வரவேற்றது, கல்வெட்டாக மனத்தில் பதிந்தது. இது நம் அரசியல் மற்றும் கொள்கை வழிப் பயணத்தை இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் அடர்த்தியாகவும் ஆக்கி உள்ளது. அதை இனி நாம் சற்றும் சமரசமின்றிச் செய்வோம். அதனை உறுதிப்படுத்த ‘செயல்மொழிதான் நம் அரசியலுக்கான தாய்மொழி’ என்பதை மீண்டும் இங்கு நினைவுபடுத்துகிறேன்.

எத்தனை மறைமுகத் தடைகள் உருவாக்கப்பட்டாலும், நமக்காக நம் மக்கள் கூடும் திடல்கள் எப்போதும் கடல்களாகத்தான் மாறும் என்பதை உணர்ந்து, ஜன நெருக்கடி சிறிதும் இல்லாத வகையில் நிலம் தேர்வு செய்வதில் இருந்து மாநாடு முடியும்வரை தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து அனைத்துப் பணிகளையும் சிறப்புடன் மேற்கொண்ட கழகப் பொதுச் செயலாளர், அவருக்கு உறுதுணையாக இருந்து மாநாட்டுப் பணிகளை மேற்கொண்ட கூடுதல் பொதுச் செயலாளர்கள், பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர், கழகத் தலைமை நிலையச் செயலக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக அனைத்து நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட அனைத்துக் குழுவினர், நகர, ஒன்றிய, பேரூர், கிளை, வார்டு கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநாடு வெற்றி பெறுவதற்காக உழைத்த நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாவட்டக் கழகச் செயலாளர்களான நம் சகோதரர்கள் திரு. A.விஜய் அன்பன் கல்லானை அவர்கள், திரு. S.R.தங்கப்பாண்டி அவர்கள் மற்றும் மாவட்டக் கழகங்களின் அனைத்து நிர்வாகிகள், மாநாட்டுத் திடல் மற்றும் அரங்க அமைப்புப் பணிகளை மேற்கொண்ட திரு. M.அறிவு (Emee Global Events) அவர்கள், ஈடு இணையற்றப் பணிகளை அர்ப்பணிப்புடன் செய்த டாக்டர் திரு. T.K.பிரபு அவர்கள் தலைமையிலான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பில் பணியாற்றிய தமிழ்நாடு காவல் துறை, அனைத்து அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், தனியார் பாதுகாப்புக் குழுவினர், அனைத்து ஊடகத் துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பு நன்றி. மாநாட்டு வெற்றிக்காக ஒத்துழைப்பு நல்கிய நம் கழகத் தோழர்களுக்கும், நம்மோடு இணைந்து நிற்கும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நிரந்தர மலர்கள் கொண்டு தூவி, நெஞ்சார்ந்த நன்றியறிதலை மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நம் மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம்.
அல்லவை அனைத்தையும் புறந்தள்ளிப் புன்னகைப்போம். மக்களோடு மக்களாக இணைந்து நிற்கும் மக்களரசியல் மட்டுமே, நமது நிரந்தர அரசியல் நிலைப்பாடு. மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு.

மக்களுடன் தோளோடு தோள் சேர்ந்து தொடர்ந்து பயணிப்போம். தூய அரசியல் அதிகார இலக்கை வெல்வோம். 1967, 1977 தேர்தல் அரசியல் வெற்றி விளைவுகளை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நம் தமிழ் மக்கள் நமக்காக நிகழ்த்திக் காட்டப் போவது நிச்சயம். நல்லதே நடக்கும். நம்பிக்கையோடு பயணிப்போம். வெற்றி நிச்சயம்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : மாஸ்க் மனிதன் யார்? அவருக்கு நிதி அளித்தது யார்? தர்மஸ்தலாவை அவதூறு செய்வதன் மூலம் யாருக்கு லாபம்? அண்ணாமலை சராமாரி கேள்வி..

RUPA

Next Post

பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.. குழந்தைகளின் பாதுகாப்பை புறக்கணிக்கக் கூடாது.. முதல்வருக்கு ஏன் இதை செய்ய மனம் வரவில்லை? அண்ணாமலை சாடல்!

Sat Aug 23 , 2025
தமிழக பாஜக முன்னாள் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாலைப்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் கட்டிடத்தில், கடந்த 5 ஆண்டுகளாக, போதிய வசதிகள் இன்றி இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர், இன்று அதிகாலையில் […]
67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

You May Like