பிரபல கன்னடம் மற்றும் தெலுங்கு சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் 41 வயது நடிகை ஒருவருக்கு ஃபேஸ்புக் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் நடிகைக்கு ‘Naveenz’ என்ற பெயரில் ஃபேஸ்புக் மூலம் ஃபிரண்ட் ரிக்வஸ்ட் வந்துள்ளது. அந்த நபர் யார் என்று தெரியாததால் நடிகை அதனை ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும், அந்த நபர் மெசஞ்சர் வழியாக நடிகையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தும், ஆபாசமான வீடியோக்களை அனுப்பியும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அவர் தனது அந்தரங்க உறுப்பை வீடியோ எடுத்து நடிகைக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை, எச்சரித்து அந்த நபரை பிளாக் செய்துள்ளார். ஆனால், அந்த நபர் வேறு சில ஃபேஸ்புக் ஐடிகளை உருவாக்கி, தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த 1-ஆம் தேதி மீண்டும் ஆபாச செய்தி அனுப்பிய நபருக்கு நடிகை சாமர்த்தியமாகப் பதிலளித்துள்ளார். நாகரபாவி 2-வது ஸ்டேஜில் உள்ள நந்தன் பேலசில் சந்திக்க முடியுமா என்று கேட்டுள்ளார். இதற்கு அந்த நபர் பயந்து மறுத்துள்ளார். அப்போதும் அறிவுரை வழங்கியும் கேட்காததால், வேறு வழியின்றி நடிகை பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தொடங்கினர். தீவிர விசாரணையில், நடிகைக்கு தொல்லை கொடுத்தவர் நவீன் கே மோன் என்பது தெரியவந்தது. மேலும், இவர் குளோபல் டெக்னாலஜி என்ற பன்னாட்டு ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் டெலிவரி மேனேஜராக பணியாற்றியதும் தெரியவந்தது.
லண்டன், பாரிஸ், நியூயார்க் போன்ற இடங்களில் அலுவலகங்களை கொண்ட நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தவர், இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.



