உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததற்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது.. இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தண்ணீரில் மிதந்து வந்ததாக தகவல் வெளியானது.. சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றில் மனுக்கள் மிதப்பதை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.. இதையடுத்து ஆற்றுப்பகுதிக்கு வந்த போலீசார், மனுக்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் ஆற்றில் வீசப்பட்டு மனுக்களுக்கு இன்னும் உரிய தீர்வு காணப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது..
இந்த நிலையில் இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்படும் எனக்கூறி இந்த விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள், இன்று சிவங்கங்கை வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனங்கள். எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கறுப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.
நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டது. உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல, சிவகங்கை வைகையாற்றில் மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது..
மக்களின் வலிகளை, உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல் , அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி , உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : குஷியில் இபிஎஸ்.. அதிமுக கட்சி விதிகள் திருத்தம்.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..