உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் வெளிநாட்டு தொடர்புகளை முற்றிலும் மறுக்கும் பழங்குடி சமூகங்களில் ஒன்றாக சென்டினிலீஸ் மக்கள் கருதப்படுகின்றனர். இவர்கள் இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியாக உள்ள வடக்கு சென்டினல் தீவில் வசித்து வருகின்றனர். இந்த தீவு பூமியின் மிகவும் தடைசெய்யப்பட்ட இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பழங்குடியினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கம் வடக்கு சென்டினல் தீவிற்குள் நுழைவதற்கு முழுமையான தடையை விதித்துள்ளது. தீவைச் சுற்றியுள்ள ஐந்து கடல் மைல் சுற்றளவு பகுதியும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லைக்குள் பயணம் செய்வது, தரையிறங்குவது, புகைப்படம் எடுப்பது அல்லது பழங்குடியினருடன் தொடர்பு கொள்வது சட்டவிரோதமாகும்.
வடக்கு சென்டினல் தீவு வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் பவளப்பாறைகளால் சூழப்பட்ட இந்த தீவு, வெளிநாட்டு தொடர்புகளை இயல்பாகவே தடுக்கும் புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் இந்த தனிமையை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
சென்டினிலீஸ் பழங்குடியினர் வெளியாட்கள் மீது தொடர்ந்து விரோதப் போக்கைக் காட்டி வருகின்றனர். தீவை நெருங்கும் எவரும் அம்புகள், ஈட்டிகள் மற்றும் கற்களால் தாக்கப்படுகின்றனர். 2006 ஆம் ஆண்டு, மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் தங்களது படகு கரைக்கு அருகே சென்றபோது கொல்லப்பட்டனர். அதேபோல், 2018 ஆம் ஆண்டு பழங்குடியினரைத் தொடர்பு கொள்ள முயன்ற ஒரு அமெரிக்க மிஷனரி தீவுக்குள் நுழைந்தபோது உயிரிழந்தார். இந்த சம்பவம், தொடர்பு இல்லாத கொள்கையை இந்திய அரசு மேலும் கடுமையாக்குவதற்கு காரணமாக அமைந்தது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் இந்தப் பழங்குடி சமூகத்திற்கு, நவீன உலகில் காணப்படும் சாதாரண நோய்களுக்கே நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. வெளியாட்களால் பரவும் ஒரு எளிய சளி அல்லது காய்ச்சல் கூட முழு சமூகத்தையே அழித்துவிடும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சென்டினிலீஸ் மக்கள் முற்றிலும் வேட்டையாடும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் விலங்குகளை வேட்டையாடி, கடலில் மீன் பிடித்து, காட்டு பழங்கள் மற்றும் வேர்களை சேகரித்து வாழ்கின்றனர். விவசாயத்தில் ஈடுபடுவதில்லை. கப்பல் விபத்துகளால் கிடைக்கும் இரும்புகளை பயன்படுத்தி, எளிய கருவிகள் மற்றும் ஆயுதங்களை உருவாக்கி வருகின்றனர்.
Read more: விஜய்க்கு எதிராக பேசக்கூடாது.. பாஜகவினருக்கு பியூஷ் கோயல் அறிவுறுத்தல்..! இதுதான் காரணமாம்..!



