திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு நடுக்குப்பம் பகுதியில், விவசாய நிலத்தில் ஒரு பெண் பலத்த காயங்களுடன் நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர் சின்னகாளி (வயது 42) ஆவார். இவரது கணவர் சாம்பசிவம் 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்த நிலையில், இவருடைய பெண் குழந்தைகள் திருமணமாகி கணவர்களுடன் வசித்து வருகின்றனர்.
இதனால் தனியாக வசித்து வந்த சின்னகாளி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நீண்ட காலமாக 6 ஏக்கர் நிலத்தைப் பட்டா பெற்றிருந்தார். நேற்று முன்தினம், பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சின்னகாளியின் உடல் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தலை மற்றும் உடலின் பிற பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி நேரில் வந்து விசாரணை நடத்தினார். கொலைக்கான காரணம், கொலையாளிகள் யார் எனப் பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.
ஆரம்பக்கட்ட விசாரணையின் போது, சின்னகாளியின் மகள் கீதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கீதா, “என் தாய்க்கு ஊரில் பலருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அதனால் ஏற்பட்ட பிரச்சினையில் இந்தக் கொலை நடந்திருக்கலாம்” என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். பெற்ற தாய் குறித்து மகள் இப்படி வெளிப்படையாக பேசியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கீதாவையும் அவரது கணவர் சிதம்பரத்தையும் போலீசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியபோது, கொடூரமான உண்மை வெளிவந்தது. சின்னகாளி பெயரில் இருந்த 6 ஏக்கர் நிலத்தை தங்களுக்கு எழுதி வைக்குமாறு கீதாவும் சிதம்பரமும் தொடர்ச்சியாக வற்புறுத்தியுள்ளனர். சின்னகாளி மறுக்கவே, “வயதான உனக்கு இவ்வளவு நிலம் எதற்கு? எங்களுக்கு எழுதிக் கொடு” என்று வாக்குவாதம் முற்றியுள்ளது.
இரவு 11 மணியளவில் வாக்குவாதம் சண்டையாக மாறி, ஆத்திரத்தில் சின்னகாளியை இருவரும் சேர்ந்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர், இந்தக் கொலை தகாத உறவால் நடந்ததுபோல மற்றவர்களுக்குத் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, சின்னகாளியின் உடைகளை கழற்றிப் பக்கத்து நிலத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். சொத்துக்காக தாயை மகளும் மருமகனுமே கொலை செய்த இந்தக் கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



