திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அத்துமீறி நுழைந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய அந்த இளம் பெண், மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் திருமணம் ஆகாமல், பெற்றோர் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார். மகளின் பாதுகாப்புக்காக, கணவன்-மனைவி இருவரில் ஒருவர் எப்போதும் வீட்டில் இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
சம்பவத்தன்று, பெண்ணின் தந்தை வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நிலையில், தாய் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக தாய் கடைக்குச் சென்றபோது, இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இளம்பெண் தனியாக இருப்பதை நோட்டமிட்ட பிரபு என்ற நபர், அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அவர், அந்தப் பெண்ணின் கை கால்களை கயிற்றால் கட்டி, வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வலி தாங்க முடியாமல் இளம்பெண் கதறி அலறிய சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்துள்ளனர். அப்போது, பிரபு அந்தப் பெண்ணிடம் அத்துமீறியது கையும் களவுமாக தெரிய வந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பிரபுவைப் பிடித்து நடுத்தெருவில் வைத்துத் தர்ம அடி கொடுத்துக் கட்டி வைத்தனர். பின்னர், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீஸார், பிரபுவை கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட பிரபு ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பதும், பல நாட்களாகவே அந்தப் பெண்ணை நோட்டமிட்டு காத்திருந்து இந்த செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



