மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் திமுகவை சேர்ந்த பி.வில்சன், எம்.சண்முகம், முகமது அப்துல்லா, மதிமுகவை சேர்ந்த வைகோ, பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ், அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இருந்து 6 புதிய எம்பிக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதன்படி இதில் திமுகவில் இருந்து 4 எம்.பி.க்களும், அதிமுகவில் இருந்து 2 எம்.பி.க்களும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மீண்டும் மாநிலங்களவைக்கு செல்ல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதற்கிடையே, அதிமுகவில் தேமுதிகவுக்கு ஒரு இடம் கொடுப்பதாக கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது பேசப்பட்டதாக அக்கட்சி கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அப்படி எதுவும் பேசவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டார். இதனால், அதிமுக – தேமுதிக இடையே அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மாநிலங்களவை தேர்தல் குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் மாநிலங்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஜனவரி 7ஆம் தேதி கடலூரில் தேமுதிகவின் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம்” என்றார்.