முகலாயர் காலம் ஆட்சி சாம்ராஜ்யம், செல்வச் செழிப்பு, கலை, கலாசாரம், காதல், கொடுமை அனைத்தும் கலந்து இருந்த ஒரு வித்தியாசமான காலப்பகுதி. அந்த முகலாயர் வரலாற்றில் இன்று வரை பேசப்படும் ஒரு காதல் கதை உள்ளது. இளவரசர் சலீமும் நடனக் கலைஞர் அனார்கலியும்!
அனார்கலி லாகூரில் வாழ்ந்த அழகிய நடனக் கலைஞர். முகலாய அரசவையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி பேரரசர் அக்பரின் அரண்மனைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு நாள், பேரரசரின் மகன் இளவரசர் சலீம் (ஜஹாங்கீர்) அவள் மீது காதல் கொண்டார்.
அந்தக் காதல் கதையே அரசவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரச வட்டாரங்களில் “பேரரசரின் மகன், ஒரு நடனக் கலைஞரை காதலிக்கிறார்” என்ற வதந்திகள் பரவியதும், பேரரசர் அக்பர் கடும் கோபமடைந்தார். பிரிட்டிஷ் பயணி வில்லியம் ஃபின்ச் கூற்றின்படி, அனார்கலி, அக்பரின் மனைவிகளில் ஒருவராக இருந்ததாகவும், ஆனால் தனது மகன் சலீம் அவளுடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த அக்பர் அவளை உயிருடன் சுவருக்குள் அடைத்து கொலை செய்ய உத்தரவிட்டதாகவும் பதிவு செய்துள்ளார்.
இது ஒரு கற்பனைக்கதை அல்ல என்று வரலாற்று ஆதாரங்களும் சுட்டுகின்றன.
‘தாரிக்-இ-லாகோர்’ என்ற நூலில் சையத் அப்துல் லத்தீஃப், அனார்கலியின் கல்லறையில் 1599 ஆம் ஆண்டு தேதி பொறிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடுகிறார். அதுவே அவர் உயிரிழந்த ஆண்டு என்றும் கருதப்படுகிறது.
அனார்கலியின் மரணத்திற்கு பின், தன் காதலின் நினைவாக இளவரசர் சலீம் லகூரில் ஒரு கல்லறை கட்டினார். அந்த இடம் இன்று “Anarkali Tomb” என்று அழைக்கப்படுகிறது. கல்லறையின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் “If I could give my life again, I would still love you the same” என்ற கவிதை வரி இன்றும் மனதை உருக்கும்.