மதுரையிலிருந்து திரைத்துறைக்குள் நுழைந்த விஜயகாந்த், தன் கடின உழைப்பால் தனக்கென தனி அடையாளம் பெற்றவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் உச்சத்தில் இருந்த காலத்திலும், தனது திறமையால் ஒரு தனி இடத்தை பிடித்தார். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு.
திரைத்துறையில் உயர்ந்த நிலையிலும், பிற நடிகர்களுக்கு உதவி செய்ததில் விஜயகாந்த் எப்போதும் முன்னணியில் இருந்தார். பீக்கில் இருந்தபோது கூட, விஜய் மற்றும் சூர்யா போன்ற இளம் நடிகர்களின் படங்களில் கெஸ்ட் ரோலாக நடித்தார். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது பலரின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். தமிழ் சினிமாவின் கேப்டன் விஜயகாந்த் என்றாலே உதவித்தன்மை, தைரியம், மனிதநேயம் ஆகியவை நினைவுக்கு வரும்.
அந்த வகையில் சினிமாவிலும் அரசியலிலும் அவரது பங்கு என்றும் மறக்க முடியாதது. இந்தச் சூழலில் விஜயகாந்த் குறித்து தயாரிப்பாளர் சிவா ஒரு பேட்டியில் பேசியிருக்கும் விஷயங்கள் ட்ரெண்டாகியுள்ளது. அந்த பேட்டியில், ”விஜயகாந்த் படத்தில் மட்டும் கேப்டனாக இருந்ததில்லை. அவர் எப்போதும் கேப்டனாகத்தான் இருந்திருக்கிறார். தனியாளாக பல வேலைகளை செய்திருக்கிறார். நட்சத்திர கலை விழாவை அவர்தான் முன்னெடுத்து நடத்தினார். அந்த நட்சத்திர கலை விழாவின்போது மீனா உயிரோடு வந்ததற்கு காரணமே விஜயகாந்த்தான்.
அதாவது மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லும்போது ஹோட்டல் வாசலில் 1000 பேர் கூடி நின்றார்கள். போலீஸ் பாதுகாப்பு அவ்வளவாக இல்லை. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த சமயத்தில் விஜயகாந்த், நெப்போலியன், சரத்குமார் என மூன்று பேர் சேர்ந்து நடிகைகளின் லக்கேஜுகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அப்போது யாரோ ஒருவர் ஹெல்மெட் போட்டுக்கொண்டு மீனா அருகே வந்து தவறாக நடந்துகொள்ள முயன்றார்.
அதை விஜயகாந்த் கவனித்துவிட்டார். உடனே அந்த நபரிடம் வேகமாக நெருங்கி ஹெல்மெட்டை அப்படியே தூக்கிவிட்டு மண்டையில் செமயாக அடித்துவிட்டார். அந்த நபருக்கு ரத்தம் கொட்ட தொடங்கிவிட்டது. அதனைப் பார்த்து அத்தனை பேரும் பயந்து ஓடிவிட்டார்கள். அதற்கு பிறகுதான் நடிகைகளை அந்த வாகனத்தில் பத்திரமாக அழைத்து வர முடிந்தது” என்றார்.
Read more: முகவரி மாறி வசிப்பவர்களா நீங்கள்…? SIR பற்றி கவலை வேண்டாம்…! தேர்தல் ஆணையம் விளக்கம்…!



