அண்டார்டிகாவின் மிகவும் உலர்ந்த பகுதிகளில் ஒன்றான மக்மர்டோ ட்ரை வாலீஸ் பகுதியில், உலகையே ஆச்சரியப்படுத்தும் ஒரு விசித்திரமான நீர்வீழ்ச்சி உள்ளது. இதன் பெயர் “ரத்த நீர் வீழ்ச்சி ” (Blood Falls). இந்த நீர்வீழ்ச்சியில் பாயும் நீர், ரத்தம் போல சிவப்பு நிறத்தில் இருப்பதால்தான் இந்த பெயர் வந்தது. நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகளை கவர்ந்த இந்த நிகழ்வுக்குப் பின்னுள்ள காரணத்தை, தற்போது ஆராய்ச்சியாளர்கள் தெளிவாக கண்டறிந்துள்ளனர்.
இந்த ரத்த நீர்வீழ்ச்சி, 1911 ஆம் ஆண்டு டெரா நோவா பயணத்தின் போது, ஆஸ்திரேலிய புவியியலாளர் தாமஸ் கிரிஃபித் டெய்லர் என்பவரால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில், இந்த சிவப்பு நிறம் சிவப்பு பாசிகள் (Red Algae) காரணமாக இருக்கலாம் என நம்பப்பட்டது. ஆனால் பின்னர் நடைபெற்ற ஆராய்ச்சிகள், இதற்குப் பின்னால் மிகவும் ஆழமான அறிவியல் காரணம் இருப்பதை வெளிப்படுத்தின.
ரத்த நீர்வீழ்ச்சி உருவாகும் விதம்
ரத்த நீர்வீழ்ச்சியில் நீர், டெய்லர் பனிப்பாறையின் கீழ் மறைந்திருக்கும் ஒரு பழமையான உப்பு கலந்த ஏரியிலிருந்து வருகிறது. இந்த ஏரி, சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக வெளி உலகத்திலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதில் அதிக அளவு இரும்புச் சத்து மற்றும் உப்பு இருப்பதால், கடும் பனிப்பொழிவு நிலவினாலும், நீர் உறையாமல் திரவமாகவே உள்ளது. இந்த நீர் பனிப்பாறையில் உள்ள சிறிய பிளவுகள் வழியாக வெளியேறி, காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேரும் போது, அதில் உள்ள இரும்பு ஆக்சிடேஷன் ஆகி, துருப்பிடித்த இரும்பைப் போல கருஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது.
கடுமையான சூழலில் வாழும் நுண்ணுயிர்கள்
இந்த பனிக்கடியில் இருக்கும் ஏரியில், ஆக்சிஜன் இல்லாத சூழலிலும் உயிர்வாழக்கூடிய நுண்ணுயிர்கள் (Microbes) வாழ்கின்றன. இவை இரும்பு மற்றும் சல்பேட் போன்ற வேதிப்பொருட்களை பயன்படுத்தி ஆற்றலை பெறுகின்றன. இத்தகைய கடுமையான சூழலிலும் உயிர் வாழ முடியும் என்பதால், இது விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சிக்கும் முக்கியம்
இந்த கண்டுபிடிப்பு, விண்வெளி உயிரியல் (Astrobiology) ஆராய்ச்சியாளர்களையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக, வியாழன் கிரகத்தின் யூரோபா மற்றும் சனியின் என்சிலடஸ் ஆகிய நிலவுகளில், பனிக்கடியில் கடல்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அங்கு கூட இப்படிப்பட்ட சூழலில் உயிர் இருக்க வாய்ப்பு உள்ளதா என்பதை புரிந்து கொள்ள, ரத்த நீர்வீழ்ச்சி ஒரு முக்கிய உதாரணமாக கருதப்படுகிறது.
புதிய அறிவியல் முன்னேற்றங்கள்
2017 ஆம் ஆண்டு, அலாஸ்கா பல்கலைக்கழகம் (University of Alaska Fairbanks) மற்றும் கொலராடோ கல்லூரி விஞ்ஞானிகள், ரேடார் மற்றும் படமெடுக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இந்த பனிக்கடிக் ஏரியின் இருப்பை உறுதி செய்தனர். மேலும், பனியின் கீழ் உப்பு நீர் ஓடும் பாதைகளையும் வரைபடமாக பதிவு செய்தனர். இந்த ஆய்வுகள், பனிப்பாறைகளின் கீழ் நீர் நகர்வது, பனி உருகுதல் மற்றும் கடல் மட்ட உயர்வு போன்ற காலநிலை மாற்றம் தொடர்பான விஷயங்களை புரிந்து கொள்ள உதவுகிறது.
பூமியின் பழைய காலத்திற்கான சாளரம்
பல மில்லியன் ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஏரி, பூமியின் பழைய சூழ்நிலைகளை அறிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக உள்ளது. ஆரம்ப காலங்களில் உயிரினங்கள் எவ்வாறு உருவானது, கடுமையான சூழலில் அவை எப்படி வாழ்ந்தன என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் இதன் மூலம் புரிந்து கொள்ள முயல்கின்றனர்.
அணுக முடியாத தொலைதூர பகுதியில் இருந்தாலும், ரத்த நீர்வீழ்ச்சி அண்டார்டிகாவின் மிக விசித்திரமான இயற்கை அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. பனியின் கீழ் மறைந்திருக்கும் சிக்கலான இயற்கை அமைப்புகளை இது உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது.
Read More : உலகின் மிக விலையுயர்ந்த அரிசி: 1 கிலோவின் விலையே இத்தனை ஆயிரமா? வியக்க வைக்கும் தகவல்..!



