தமிழ்நாடு ஆளுநர் இல்லத்தின் பெயர் ராஜ்பவன் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மக்கள் பவன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்த கோரிக்கையை ஏற்று ராஜ் பவன் என்ற பெயரை மாற்றி மக்கள் பவன் என அழைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி ‘ராஜ்பவன்’ என்று அழைக்கப்பட்டு வந்த ஆளுநர் இல்லம் மக்கள் பவன் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிய பிரதேசங்களில் உள்ள ஆளுநர் மாளிகை லோக் நிவாஸ் என அழைக்கப்படும். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நோக்கத்தின் கீழ் ஜனநாயக அமைப்புகளில் மக்களின் பங்கேற்பை வலியுறுத்துவதே இந்தப் பெயர் மாற்றத்தின் நோக்கம் என்று மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை அடுத்து, ஆளுநர் மாளிகையின் லெட்டர் ஹெட்கள், பெயர்ப் பலகைகள், சமூக ஊடக கணக்குகள் ஆகியவற்றிலும் மக்கள் பவன் என பெயர் மாற்றப்படும்.



