கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள அழகிய திருச்சிற்றம்பலமுடையான் கோவில், தமிழ்நாட்டின் மிகப் புகழ்பெற்ற நடராஜர் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பொதுவாக சிவன் கோவில்களில் நடராஜருக்கு உபசன்னதி மட்டுமே காணப்படும் நிலையில், இங்கு மூலவராகவே நடராஜர் அருள் பாலிக்கிறார் என்பது கோவிலின் மிகப்பெரும் தனிச்சிறப்பு.
இக்கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக மனுநீதி முறைப்பெட்டி மற்றும் ஆராய்ச்சி மணி விளங்குகிறது. பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை ஒரு கடிதத்தில் எழுதி, அந்த மனுநீதி பெட்டிக்குள் போட்டு, அருகே இருக்கும் ஆராய்ச்சி மணியை மூன்று முறை அடிக்க வேண்டும். இதன் மூலம், நடராஜரிடம் நேரடியாக முறையிட்டதாகக் கருதப்படுகிறது.
கோவிலின் தீட்சிதர்கள், பக்தர்கள் எழுதிய கடிதத்தை எடுத்து ரகசியமாக நடராஜர் முன்பு வாசித்து விட்டு, உடனடியாக எரிக்கும் வழக்கமும் உள்ளது. அந்த வேண்டுதல் நியாயமானதாக இருந்தால், நடராஜர் உடனடியாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மேலும், வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மீண்டும் வந்து நன்றி கடிதம் எழுதி அதே பெட்டியில் செலுத்துவது வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக, இக்கோவில் “நடராஜரிடம் மனு அளிக்கும் தலம்” என அழைக்கப்படுகிறது.
கோவிலின் தனித்துவங்கள்:
வழக்கமாக நடராஜரின் பாதத்தில் மாணிக்கவாசகர் இருப்பார்; ஆனால் இங்கு திருமூலர் காட்சி தருகிறார். நடராஜருக்கு இரு புறமும் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் மூலஸ்தானத்திலேயே காட்சி தருகிறார்கள். அதே போல் சிவாலயத்தில் சிவனுக்கு எதிராக சூரியன் மற்றும் சந்திரனுக்கு தான் சன்னதி இருக்கும். ஆனால் இந்த கோவிலில் சூரியனுக்கும் பைரவருக்கும் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. பைரவர் பத்து திருக்கரங்களுடன் தசபுஜ பைரவராக அருள் செய்வது மற்றொரு சிறப்பம்சமாகும்.
நவகிரக மண்டபம் ஒரே கல்லால் ஆனதாகும். மத்தியில் பத்ம பீடத்தில் சூரியனுக்கு, மற்ற எட்டு கிரகங்கள் எட்டு திசைகளை நோக்கி தவக்கோலத்திலும் காட்சி தருகின்றன. நடராஜருக்கு 5 சபைகள் இருப்பது தெரியும். இவற்றை பஞ்ச சபைகள் என்கிறார்கள். ஆனால் ஆறாவதாக இக்கோவிலில் பளிங்கு சபை அமைக்கப்பட்டுள்ளது தனித்துவமான ஒன்றாகும். வழக்கமாக நாயன்மார்கள் பிரகாரத்தில் தான் இருப்பார்கள். ஆனால் இங்கு நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உள்ளது. இவற்றை திருத்தொண்டர் திருக்கோவில் என அழைக்கிறார்கள்.
மாணிக்கவாசகர், திருவாசகத்தை எழுதி முடித்தபோது, கடைசியில் “திருச்சிற்றம்பலமுடையான்” என குறிப்பிட்டதாலேயே இத்தல இறைவன் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்ற திருநாமம் பெற்றார் என கூறப்படுகிறது. மேலும், கோவிலின் சுற்றுச் சுவர்களில் திருமுறைப் பாடல்கள் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளன. அதில் தலைவலி, வயிற்றுவலி போன்ற நோய்கள் நீங்க, செல்வம் பெருக, சங்கடங்கள் அகல, எந்த பாடலைப் பாட வேண்டும் என குறிப்புகள் இடப்பட்டுள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குப் பிறகு மிக முக்கியமான நடராஜர் தலமாக விளங்கும் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் கோவில், பக்தர்களின் வேண்டுதல்களை நேரடியாகக் கேட்டு நிறைவேற்றும் தலமாக, ஆன்மிக வரலாற்றில் தனித்துவம் பெற்றுள்ளது. பக்தர்களின் கடிதங்களை வாசித்து அருள் செய்கிற நடராஜர் இங்கு பக்தர்களின் வாழ்வில் நீதி, நன்மை மற்றும் நம்பிக்கை நிலைநிறுத்தி வருகிறார்.
Read more: கஜகேசரி யோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கும் பணம் கொட்டும்! செல்வம், அதிர்ஷ்டம் கிடைக்கும்!



