பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு 11-ம் தேதி 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. மொத்தம் 69 சதவீத வாக்குகள் பதிவாகின. இது, முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை விட அதிகம் ஆகும்.
அதிக அளவாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாவட்டமான கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 76.23 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவித்தன.
இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதனை தொடர்ந்து மின்னணு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. 243 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. பீகாரில் புதிதாக ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்து இன்று பகல் 12 மணிக்குள் தெரிய வரும்.
மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் முடித்துள்ளது. கிட்டத்தட்ட 38 மாவட்டங்களில் 57 எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் மின்தளத்தில் (EVM) தரவு சரிபார்ப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் results.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்படும். மாலைக்குள் இறுதி முடிவுகள் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.



