திரைப்படங்களில் நாம் பார்க்கும் சம்பவங்கள் நிஜத்திலும் சில சமயங்களில் அரங்கேறுவது உண்டு. ‘திருட்டுப் பயலே’ படத்தில் நடிகர் ஜீவன் ஒரு தம்பதியின் கள்ளத்தொடர்பை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பார். அதேபோல், கேரளாவில் திருமணமான ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை படம்பிடித்து, அவரை மிரட்டிப் பணம் பறித்த இருவர் தற்போது போலீசிடம் சிக்கியுள்ளனர்.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பல்லித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான சமல். இவரது நண்பர், 48 வயதான லத்தீப். இவர்கள் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில், சமலின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த திருமணமான பெண் ஒருவர், அவரது கணவருக்கு தெரியாமல், ஆலக்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இதையறிந்த சமல், தனது சகோதரர் ஷியாம் என்பவருடன் சேர்ந்து, அந்தப் பெண்ணும் அவரது கள்ளக்காதலனும் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி, அந்தப் பெண்ணை மிரட்டி பலமுறை பணம் பறித்துள்ளனர்.
இதற்கிடையே, சமலின் சகோதரர் ஷியாம் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்நிலையில், சமல் அந்தப் புகைப்படங்களை தனது நண்பரான லத்தீப்பின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, லத்தீப் அந்தப் பெண்ணை மிரட்டிப் பணம் கேட்டுள்ளதுடன், தன் ஆசைக்கு இணங்குமாறும் வற்புறுத்தியுள்ளார்.
பணம் கொடுத்த வரை பொறுமையாக இருந்த அந்தப் பெண், இந்த மிரட்டல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சமல் மற்றும் லத்தீப் ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் கண்ணூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.