தென்னிந்தியாவின் ஆன்மீக தலங்களில் தனிச்சிறப்புடன் விளங்கும் குடைவரை கோவில்களில் புதுக்கோட்டை மாவட்டம், தேவர்மலை குடைவரை கோவில் முக்கியத்துவம் பெறுகிறது. புதுக்கோட்டையில் இருந்து சுமார் 28 கி.மீ தொலைவிலும், பேரையூர் விளக்கில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலும் உள்ள இந்தக் குடவரைக் கோவில், ஆழமான வரலாற்று பின்னணியை கொண்டுள்ளது.
இந்த குடைவரைக் கோவில் உருவாகியதற்கு காரணம், 63 நாயன்மார்களில் ஒருவரான பெருமிழலை குரும்ப நாயனார் தான். தீவிர சிவபக்தரான இவர், தவமிருந்து இந்தப் பகுதியில் உள்ள மலையை குடைந்து சிவன் கோவிலை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. மேலும், பெருமிழலை குரும்ப நாயனார் இந்தக் கோவிலை உருவாக்கியது மட்டுமன்றி, இந்த கோவிலிலேயே ஜீவசமாதி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது இந்த தலத்தின் ஆன்மீக மகத்துவத்தை மேலும் கூட்டுகிறது.
ஆண்டு முழுவதும் வற்றாத சுனை நீர் :
இக்கோவிலின் கருவறை, தேவர்மலைப் பாறையைக் குடைந்து குடைவரைக் கருவறையாக அமைந்துள்ளது. மலையின் உச்சியில் இருக்கும் ஒரு சுனை இந்தக் கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பு. ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் நிரம்பியிருக்கும் இந்தச் சுனையின் நீரைக் கொண்டுதான் சுவாமிக்கும், பெருமிழலைக் குரும்ப நாயனாருக்கும் தினசரி அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
நாயனாரின் பக்தியையும் பெருமையையும் போற்றும் வகையில், இந்த ஊர் மக்கள் அவரது பிறந்த நாளான ஆடி மாதம் சித்திரை நட்சத்திரம் அன்று இந்தக் கோவிலில் சிறப்பு விசேஷமாக அன்னதானம் அளித்து மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். மேலும், இந்தச் சிவாலயத்தில் இரண்டு நந்திகள் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.