இந்து சாஸ்திரங்களின்படி, மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இதனை ‘பித்ருபட்ச’ அமாவாசைக்கு இணையான ஒரு தினமாகப் பெரியோர்கள் குறிப்பிடுகின்றனர். 2025-ஆம் ஆண்டில், இந்த விசேஷமான மார்கழி அமாவாசை டிசம்பர் 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது.
நம்முடைய முன்னேற்றம் மற்றும் குடும்ப நலனுக்காகப் பாடுபட்டு மறைந்த முன்னோர்களை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்ய இது உன்னதமான நாளாகும். இந்த நாளில் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையவும், நம் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகவும் 5 குறிப்பிட்ட பொருட்களைத் தானமாக வழங்குவது சிறந்தது என்று ஆன்மீக வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
குளிரைப் போக்கும் போர்வை தானம் :
மார்கழி மாதம் என்றாலே நடுங்கும் குளிர் காலம். இந்த கடும் குளிரில் தவிக்கும் ஏழைகளுக்கும், சாலையோரம் வசிப்பவர்களுக்கும் போர்வை அல்லது கம்பளி போன்ற ஆடைகளைத் தானமாக வழங்குவது மகா விஷ்ணுவின் அருளைப் பெற்றுத்தரும். ஒருவரின் உடல் துன்பத்தை போக்குவது என்பது இறைவனுக்குச் செய்யும் நேரடித் தொண்டாகும். இத்தகைய தானம், நம் வாழ்க்கையில் உள்ள இன்னல்களை நீக்கி, மனதிற்கு ஆழ்ந்த அமைதியை தரும்.
கருப்பு எள் மற்றும் வெல்லம் :
மார்கழி மாதமானது முன்னோர்களின் முக்திக்கு மட்டுமின்றி, சூரிய பகவானின் அருளைப் பெறுவதற்கும் உகந்தது. இந்த அமாவாசை தினத்தில் கருப்பு எள் மற்றும் வெல்லத்தை தானம் செய்வது மிக உயரிய பலன்களைத் தரும். கருப்பு எள்ளை தானம் செய்வதன் மூலம் சனி பகவானால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறையும். அதேபோல், வெல்லத்தை தானம் அளிப்பது ஜாதகத்தில் சூரியனின் நிலையைப் பலப்படுத்தும். இதன் மூலம் சமூகத்தில் மதிப்பும், கௌரவமான பதவிகளும் உங்களைத் தேடி வரும்.
நெய் மற்றும் அன்னதானம் :
அமாவாசை அன்று தூய்மையான பசு நெய்யை தானம் செய்வது அதிர்ஷ்டத்தை தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மார்கழி மாதத்தில் நெய் கலந்த உணவுகளை அன்னதானமாக வழங்குவது மிகவும் நல்லது. சந்திரன் மற்றும் சனியின் அருளை பெற்றுத்தரும் இந்த தானம், மன குழப்பங்களை நீக்கி தெளிவான முடிவுகளை எடுக்க உதவும். வாழ்க்கையில் தொடரும் நீண்ட கால துன்பங்களில் இருந்து விடுபட இது ஒரு வழியாக அமையும்.
தண்ணீர் மற்றும் வெள்ளி :
தானங்களிலேயே மிகச் சிறந்தது நிதானம் மற்றும் தானம் என்பார்கள். இந்த நாளில் தாகம் தீர்க்கும் தண்ணீர் தானம் செய்வது முன்னோர்களைப் பெரிதும் மகிழ்விக்கும். வசதி உள்ளவர்கள் சிறிய அளவிலாவது வெள்ளியைத் தானமாக வழங்கலாம். வெள்ளி என்பது சுக்கிரன் மற்றும் சந்திரனுக்குரிய உலோகமாகும். சந்திரனை ‘மனோகாரகன்’ என்று அழைப்பார்கள். எனவே, அவருக்குரிய உலோகத்தைத் தானம் செய்யும்போது மன அழுத்தம் நீங்கி, நேர்மறையான சிந்தனைகள் உருவாகும்.
நவதானிய தானம் :
மார்கழி அமாவாசை அன்று 9 வகையான தானியங்களை தானம் செய்வது குடும்பத்தில் வறுமையை அண்டவிடாது. ஒன்பது தானியங்கள் கிடைக்காவிட்டாலும், அரிசி, கோதுமை உள்ளிட்ட ஏழு வகையான தானியங்களை தானம் செய்யலாம். தொழிலில் நஷ்டம் அல்லது வேலைவாய்ப்பில் தடைகளைச் சந்திப்பவர்கள் இந்தத் தானிய தானத்தை செய்வதன் மூலம் புதிய வாய்ப்புகளையும், பொருளாதார வளர்ச்சியையும் பெறுவார்கள்.
Read More : வாழ்வின் துன்பங்களை களைக்கும் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர்.. பக்தர்களை ஈர்க்கும் புகழ்பெற்ற திருத்தலம்..!



