தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் மெகா கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில், சமீபத்தில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அதிமுக கூட்டணியில் இணைந்தது. ஆனால், கூட்டணி அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, ஜான் பாண்டியன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், திண்டுக்கல்லில் நடந்த பரப்புரையின்போது, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்டுவோம் என்றும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம் என்றும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஜான் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது குறித்த எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தேவையற்றது. தேர்தல் நேரத்தில் இதுபோல் பேசுவது, உங்கள் அரசியல் பயணத்திற்கு ஆபத்தானது. உங்களுடைய பயணம் தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வேண்டுமே தவிர, குறுகிய எண்ணத்தில் இருக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டணி குறித்து பேசிய அவர், “சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது 3 மாதங்களுக்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் எம்.பி. சத்யபாமா போன்றோரை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கியதால் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், கூட்டணிக்குள்ளும் சலசலப்பு ஏற்பட்டிருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : SUN TV | கலாநிதி மாறன் போட்ட ஸ்கெட்ச்..!! சன் டிவியின் ஆண்டு வருமானம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?



