கொல்கத்தா IIM-ன் ஆண்கள் விடுதியில் ஒரு பெண் போதை மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியன் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.. சிறு குழந்தை முதல் மூதாட்டி வரை எந்த வயது பெண்களுக்குமே பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது. இந்த நிலையில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான கொல்கத்தா IIM-ன் ஆண்கள் விடுதியில் ஒரு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் IIM மாணவி இல்லை என்பது அவர் ஒரு நண்பருடன் தங்கியிருந்தவர் என்றும் கூறப்படுகிறது..
வேலை கவுன்சிலிங் அமர்வுக்காக IIM-கொல்கத்தா வளாக ஆண்கள் விடுதிக்கு அந்த பெண் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு, அந்த பெண்ணுக்கு பீட்சாவும், குளிர்பானமும் வழங்கப்பட்டன. அதில் மயக்க மருந்து கலந்திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த பானத்தை குடித்த பிறகு, அப்பெண் சுயநினைவை இழந்ததாகக் கூறப்படுகிறது. மீண்டும் சுயநினைவு வந்ததும், தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதை உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, IIM-C மாணவரான பரமானந்த் டோப்பன்வார் என அடையாளம் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூலை 19 வரை அவரை போலீஸ் காவலில் வைக்க அலிப்பூர் போலீஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார், உடனடியாக ஹரிதேவ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் ஐஐஎம் வளாகத்தின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக ஒரு போலீஸ் அதிகாரி உறுதிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக தனது தோழியைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட மாணவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 வாரங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரிக்குள் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. 24 வயது முதலாமாண்டு சட்ட மாணவி ஜூன் 25 அன்று கல்லூரி வளாகத்தில் ஒரு முன்னாள் மாணவர் மற்றும் இரண்டு மூத்த மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக பிரதான குற்றவாளியான மோனோஜித் மிஸ்ரா, இரண்டு மூத்த மாணவர்கள் மற்றும் ஒரு பாதுகாவலர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டக் கல்லூரி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க கொல்கத்தா காவல்துறைக்கு கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் ஐஐஎம்-கொல்கத்தாவில் மற்றொரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : நாட்டை உலுக்கிய விமான விபத்து.. எரிபொருள் சுவிட்ச் என்பது என்ன? அது எப்படி விபத்தை ஏற்படுத்தும்?