கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த பெண் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த வழக்கில் விவகாரத்தில் மந்திரவாதி ஷபி, பகவல் சிங் – லைலா தம்பதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கேரளாவை உலுக்கியுள்ள இந்த வழக்கின் விசாரணையில் நெஞ்சை உலுக்கும் புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா திருவல்லாவைச் சேர்ந்தவர் பகவல் சிங். இவரது மனைவி தான் லைலா. லைலாவின் முதல் கணவர் இறந்த பிறகு பகவல்சிங்குடன் உறவில் இருந்து வருகிறார். இருப்பினும் லைலாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். பகவல் சிங் மற்றும் லைலா ஜோதிடம், அமானுஷ்யங்களில் தீவிர நம்பிக்கை கொண்டவர்கள். இந்நிலையில் தான், பகவல் சிங்கின் குடும்பத்துக்கு மந்திரவாதி முகமது ஷபி அறிமுகமாகியுள்ளார். தொடர்ச்சியான பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் ஷபி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மந்திரவாதியாக தன்னை பகவல் சிங்கின் குடும்பத்துக்கு அறிமுகமாக்கிக் கொண்ட முகமது ஷபி, செல்வம் அதிகரிக்க 2 பெண்களை நரபலி கொடுத்த விவகாரத்தில் முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளார். பகவல் சிங்கின் குடும்பத்தில் செல்வம் பெருக பெண்களை நரபலி கொடுக்க எடுத்த முடிவில் ஷபி புரோக்கராகவும் செயல்பட்டுள்ளார். இதற்கிடையே, பகவல் சிங்கின் வீட்டிலேயே தங்கி வந்த ஷபி, கணவர் பகவல் சிங்கின் கண் முன்னே லைலாவுடன் உறவு வைத்துள்ளார். அதனை தொடர்ந்து கேரளாவில் லாட்டரி டிக்கெட் விற்று வந்த தருமபுரியை சேர்ந்த பத்மா (52) என்ற பெண்ணை கடத்தி உடலை 56 துண்டுகளாக வெட்டி நரபலி கொடுத்துள்ளனர். அதில், சில பாகங்களை சமைத்தும் சாப்பிட்டுள்ளனர். பத்மா காணாமல் போனதாக உத்தரப் பிரதேசத்தில் வசிக்கும் இவரது மகள் கொடுத்த புகாருக்கு பிறகே பத்மா கொல்லப்பட்ட விவகாரம் போலீசாருக்கு தெரியவந்தது.

இந்த வழக்கில் ஷபி (52), பகவல் சிங்க் (68) மற்றும் அவரது மனைவி லைலா (59) ஆகியோ கைது செய்யப்பட்டு விசாரித்ததில் ஏற்கனவே இவர்கள் வேறொரு பெண்ணை கடத்தி நரபலி கொடுத்தது தெரியவந்தது. தொடர் விசாரணைக்கு பிறகு 2 பெண்களின் உடல்களும் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அழுகிய நிலையில், மீட்கப்பட்டன. அதில், ஒரு பெண்ணின் மார்பகங்கள் துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் அந்தரங்க உறுப்பில் கத்தியை சொருகி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பலமுறை லைலாவுடன் மந்திரவாதி ஷபி உல்லாசமாக இருந்து வந்த நிலையில், லைலாவுக்கு ஷபியுடன் சேர்ந்து வாழ ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், கூடிய விரைவில் கணவன் பகவல் சிங்கை போட்டுத்தள்ளவும் இருவரும் நாள் குறித்து வந்துள்ளனர். ஆனால், அதற்குள் நரபலி விவகாரத்தில் மூவரும் சிக்கிக் கொண்டனர்.

நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உடல் ஆய்வு செய்யப்படுவதோடு டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுகுறித்து கோட்டயம் அரசு மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கையில், உடல்கள் அழுகியதுடன் பல துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளதால் பிரேதப் பரிசோதனை செய்வதில் பெரும் சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளன. இதற்கிடையே, முக்கிய குற்றவாளியான ஷபி (52), பகவல் சிங் (68) மற்றும் அவரது மனைவி லைலா (59) ஆகியோரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கேரள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.