கடல்வாழ் உயிரினங்களிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் புத்திசாலித்தனமான உயிரினமாக ஆக்டோபஸ் கருதப்படுகிறது. அதன் 8 கைகள் மற்றும் உருமாறும் திறனைத் தாண்டி, அதன் உடலில் ஒளிந்திருக்கும் இதயங்களின் ரகசியம் வியப்பிற்குரியது. ஒரு மனிதனுக்கு இதயம் இருப்பது போலன்றி, ஆக்டோபஸ்களுக்கு 3 இதயங்கள் உள்ளன. கடலின் ஆழமான, ஆக்சிஜன் குறைவாக உள்ள பகுதிகளில் வசிக்க நேரிடுவதால், அங்கிருக்கும் குறைந்தபட்ச ஆக்சிஜனையும் உடல் முழுவதும் கடத்துவதற்கு இந்த 3 இதயங்கள் அவற்றுக்குத் தேவைப்படுகின்றன.
இதில் 2 இதயங்களை ‘பிராங்கீயல் இதயங்கள்’ என்று அழைக்கிறார்கள். இவை ஆக்டோபஸின் சுவாச உறுப்பான செதில்களுக்கு (Gills) அருகில் அமைந்துள்ளன. இவை ரத்தத்தைச் செதில்களுக்கு அனுப்பி, கடல் நீரிலிருந்து ஆக்சிஜனை உறிஞ்ச உதவுகின்றன. அங்கிருந்து ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தைப் பெற்றுக் கொள்ளும் 3-வது இதயம், அதனை உடல் முழுவதும் உள்ள மற்ற உறுப்புகளுக்குப் பம்ப் செய்கிறது.
ஆக்டோபஸின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் மிகவும் சுறுசுறுப்பானது என்பதால், அதற்குத் தடையற்ற ஆக்சிஜன் விநியோகம் அவசியம். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யவே இயற்கை இந்த மூன்று இதயங்களை அதற்கு வழங்கியுள்ளது.
ஆக்டோபஸ்கள் பெரும்பாலும் கடல் தரையிலேயே ஊர்ந்து செல்வதை நாம் பார்த்திருப்போம். அவை ஏன் மீன்களைப் போல எப்போதும் நீந்துவதில்லை என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் உண்டு. ஆக்டோபஸ் வேகமாக நீந்தத் தொடங்கும்போது, அதன் உடலில் உள்ள ‘சிஸ்டமிக் இதயம்’ (உடலுக்கு ரத்தம் அனுப்பும் இதயம்) துடிப்பதை தற்காலிகமாக நிறுத்திவிடுகிறது.
நீந்துவதற்காக ஆக்டோபஸ்கள் தங்களை வேகமாகா தள்ளும்போது, உடலுக்குள் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக இதயத்தால் ரத்தத்தைப் பம்ப் செய்ய முடிவதில்லை. இதனால் ஆக்சிஜன் குறைந்து ஆக்டோபஸ் விரைவில் சோர்வடைந்துவிடும். இதனால்தான் எதிரிகளிடமிருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மட்டுமே இவை நீந்துகின்றன. மற்ற நேரங்களில் நிதானமாக ஊர்ந்து செல்வதையே இவை விரும்புகின்றன.
ஆக்டோபஸ்களின் மற்றொரு விசித்திரம் அவற்றின் ரத்தம் நீல நிறத்தில் இருப்பதுதான். மனிதர்களின் ரத்தத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அது சிவப்பாக இருக்கிறது. ஆனால் ஆக்டோபஸின் ரத்தத்தில் தாமிரம் கலந்த ‘ஹீமோசயனின்’ என்ற மூலக்கூறு இருப்பதால் அது நீல நிறமாக மாறுகிறது. குளிர்ந்த மற்றும் ஆக்சிஜன் குறைந்த ஆழ்கடல் நீரில் உயிர்வாழ இந்த நீல நிற ரத்தம் ஆக்டோபஸ்களுக்குப் பெரிதும் உதவுகிறது.
இப்படி தன் இதயத் துடிப்பு மற்றும் ரத்தத்தின் தன்மையைக் கொண்டே ஆக்டோபஸ்கள் தங்களின் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டுள்ளன. ஆற்றலைச் சேமிப்பதற்காக இவை எடுக்கும் ஓய்வு நேரங்களும், அவ்வப்போது காட்டும் சுறுசுறுப்பும் அவற்றின் விசித்திரமான உடல் அமைப்பின் வெளிப்பாடே ஆகும்.



