தேனி மாவட்டத்தை சேர்ந்த சக்ரவர்த்தி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி, கொடைக்கானலின் மலைப் பகுதிக்குக் குடியேறினார். அங்கு விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்த சக்ரவர்த்திக்கு, ஸ்பென்ஸி ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
ஸ்பென்ஸிக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்தபோதிலும், நாளடைவில் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் விவசாயத் தோட்டங்களில் தனிமையில் சந்தித்து வந்தனர். நாட்கள் செல்ல செல்ல, சக்ரவர்த்தி திடீரெனக் காணாமல் போனார். அவர் சொந்த ஊரான தேனிக்குத் திரும்பியிருக்கலாம் எனப் பலரும் நம்பியதால், இதுகுறித்து பெரிய விசாரணை எதுவும் நடக்கவில்லை. ஆனால், உண்மை வேறாக இருந்தது.
சமீபத்தில், கொடைக்கானல் பகுதியில் மணிகண்டன் மற்றும் முருகன் என்ற அண்ணன்-தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், மணிகண்டன் முருகனின் காரை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முருகன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரித்தனர்.
கார் எரிப்பு வழக்கிற்காக அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன், விசாரணையின் போது திடீரென தொடர்பில்லாத ஒரு விஷயத்தைப் பேசத் தொடங்கினான். “நான் ஒரு தவறும் செய்யவில்லை, அவர்கள் தான் திட்டமிட்டார்கள்” என்று கூச்சலிட்டு, 5 மாதங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான கொலை ரகசியத்தை உளற ஆரம்பித்தான். இது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து, காவல்துறையின் தீவிர விசாரணையில், காணாமல் போன சக்ரவர்த்திக்கும் ஸ்பென்ஸியின் குடும்பத்திற்கும் இடையிலான தொடர்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பழிவாங்கும் சதி வெளிவந்தது. சக்ரவர்த்தி ஸ்பென்ஸியின் குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார். அப்போது, ஸ்பென்ஸியின் தங்கை சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மணிகண்டனுடன் கள்ள உறவில் இருந்ததை கண்ட சக்ரவர்த்தி, அதைக் கண்டித்துள்ளார்.
ஆனால், சக்ரவர்த்தியின் நோக்கம் மோசமானதாக மாறியது. “மணிகண்டனுடனான உறவை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டுமானால், நீயும் என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும்” என்று மிரட்டி, சாந்தியையும் தனது ஆசைக்கு இணங்க வைத்தார். கள்ளக்காதலன் சக்ரவர்த்தி, தனது தங்கையான சாந்தியையும் ஏமாற்றியதை கேள்விப்பட்ட ஸ்பென்ஸி ராணி, கோபமடைந்தார்.
அவர் சக்ரவர்த்தியைக் கண்டித்தபோது, சக்ரவர்த்தி மன்னிப்புக் கேட்டாலும், ஸ்பென்ஸியை தவிர்த்துவிட்டு மீண்டும் சாந்தியுடன் நெருக்கம் காட்டத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்பென்ஸி ராணி, தங்கை சாந்தியுடன் இணைந்து சக்ரவர்த்தியைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினார். இதையடுத்து, சாந்தியின் செல்போன் மூலம் சக்ரவர்த்தியை தொடர்பு கொண்ட ஸ்பென்ஸி, “எங்களை மன்னித்து விடுங்கள், நாங்கள் இருவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம்; எங்களை திருப்தி படுத்துங்கள்” என்று இனிமையாகப் பேசி, அவரை வரவழைத்தார்.
இந்த சூழ்ச்சியை நம்பி, மதி மயங்கிச் சென்ற சக்ரவர்த்தியை, ஸ்பென்ஸி, சாந்தி மற்றும் மணிகண்டன் மூவரும் சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர், சடலத்தை கொடைக்கானலின் 600 அடி ஆழப் பள்ளத்தில் தூக்கி வீசி, யாரும் சந்தேகப்படாதவாறு இந்தக் கொலையை மறைத்துள்ளனர்.
சுமார் 5 மாதங்களுக்கு முன் நடந்த இந்த கொடூரச் சம்பவம், கார் எரிப்பு வழக்கின் ஒரு தற்செயலான வாக்குமூலத்தால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொடைக்கானல் மலையின் அமைதிக்குக் கீழ் புதைந்திருந்த இந்தப் பயங்கரமான ரகசியம் குறித்து காவல்துறையினர் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.