தாய்லாந்து மற்றும் மெக்சிகோவை தளமாகக் கொண்ட மிஸ் யுனிவர்ஸ் என்ற அமைப்பால் வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் சர்வதேச முக்கிய அழகுப் போட்டி “மிஸ் யுனிவர்ஸ்”. 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி இந்த வருடம் நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ளது.
இந்திய போட்டியில் இந்தியா சார்பில் பட்டியிடும் போட்டியாளரை தேர்ந்தெடுக்க “மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா 2025” என்ற போட்டி நேற்றைய தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த 22 வயதான மணிகா விஸ்வகர்மா “மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா 2025” பட்டத்தை வென்றார். இவருக்கு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024ல் வெற்றியாளரான ரியா சிங்கா மகுடம் சூட்டினார்.
மேலும் இந்த போட்டியில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தான்யா சர்மா முதல் ரன்னர்-அப் இடத்தையும், மெஹக் திங்க்ரா இரண்டாவது ரன்னர்-அப் இடத்தையும், ஹரியானாவைச் சேர்ந்த அமிஷி கௌஷிக் மூன்றாவது ரன்னர்-அப் இடத்தையும் பிடித்தனர்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்திற்கான இறுதிச் சுற்றில், போட்டியாளர்களின் சிந்தனையை சோதிக்கும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. “பெண்கள் கல்விக்காக வாதிடுவதா? அல்லது ஏழை குடும்பங்களுக்கு உடனடி பொருளாதார உதவியா? இதில் எதற்கே முன்னுரிமை அளிப்பீர்கள்? ஏன்? மேலும் எதிர்வாதங்களை எப்படிச் சமாளிப்பீர்கள்?”
இந்தக் கேள்விக்கு பதிலளித்த மணிகா விஸ்வகர்மா, தனது திறமையான எண்ணமும், சமூக விழிப்புணர்வும் கொண்ட பதிலில், இரண்டும் முக்கியமானவை என்றும், அவை நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை என்றும் குறிப்பிட்டார்.
அவரின் பதிலில், “இரண்டுமே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றதுதான். ஒருபுறம், நமக்கு நினைவிருக்கும் காலம் வரை கல்வி போன்ற அடிப்படை உரிமைகள் பெண்களுக்கு மறுக்கப்படுவதை நாம் காண்கிறோம். மறுபுறம், இந்த இழப்பின் விளைவை நாம் வறிய குடும்பங்கள் மூலம் காண்கிறோம். நமது மக்கள்தொகையில் ஐம்பது சதவீதத்தினருக்கு அவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டுள்ளன.
எனினும், நான் தேவைப்பட்டால், பெண் கல்வி என்ற விருப்பத்தையே தேர்ந்தெடுப்பேன். மேலும், இது ஒரு நபரின் வாழ்க்கையை மட்டும் மாற்றாது என்பதால் நான் அதை ஆதரிப்பேன்; இது இந்த நாட்டின், இந்த உலகின் எதிர்காலத்தின் முழு அடுக்குகளையும் மாற்றும். இரண்டு பிரச்னைகளும் முக்கியமானவை என்றாலும், நீண்ட காலத்திற்கு உதவக்கூடிய நடவடிக்கைகளை எடுப்பது பற்றியது” என்று மணிகா விஸ்வகர்மா கூறினார். இந்த அறிவார்ந்த மற்றும் விழிப்புணர்வான பதிலால் நடுவர்களின் மனதை வென்றார். இறுதியில், மணிகா விஸ்வகர்மா, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார்.
மணிகா விஸ்வகர்மா நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ளவுள்ளார். ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரைச் சேர்ந்த இவர், தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் பட்டப்படிப்பு மேற்கொண்டு வருகிறார் மணிகா விஸ்வகர்மா. அழகு மட்டுமன்றி அறிவும் செயல்பாடுகளும் ஒட்டியுள்ளார் என்றே கூறலாம். கடந்த ஆண்டு “மிஸ் யுனிவர்ஸ் ராஜஸ்தான்” பட்டத்தை வென்ற இவர், நியூரோனோவா எனும் நரம்பியல் வேறுபாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்பின் நிறுவுநராகவும் உள்ளார்.
பல்வேறு துறைகளில் முன்னணி நிலையைப் பிடித்துள்ள மணிகா, பிம்ஸ்டெக் செவோகானில் இந்தியாவின் பிரதிநிதியாக செயல்பட்ட அனுபவம் பெற்றவர். மேலும், லலித் கலா அகாடமி மற்றும் ஜே.ஜே கலைக் கல்லூரியால் கலைஞராக கௌரவிக்கப்பட்டுள்ளார். நேஷனல் கேடட் கார்ப்ஸ் (NCC) பட்டதாரியான இவர், பாரம்பரிய நடனக் கலைஞராகவும், திறமையான ஓவியராகவும் திகழ்கிறார். சிறப்பான பொது மேடைகள் மற்றும் பேச்சாற்றல் கொண்டவர் என்பதும் அவரது இன்னொரு பெருமை.