திருமாலின் 108 திவ்யதேசங்களில் பல தலங்கள் தனித்துவத்தாலும், வரலாற்றாலும் புகழ் பெற்றவை. ஆனால் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கள்வனூரில் உள்ள “கள்வப் பெருமாள்” தலம், அதன் அபூர்வ அமைப்பாலும், வழிபாட்டு முறையாலும் சிறப்பாக திகழ்கிறது.
இங்கே மூலவர் ஆதிவராகப் பெருமாள், சிறிய வடிவில் நான்கு கரங்களுடன் நின்று அருள் தருகிறார். மகாலட்சுமி அவரின் அருகில் காட்சி தருவதாக நம்பப்படுகிறது. விசித்திரம் என்னவென்றால், இந்த வைணவ திவ்யதேசம், நேராக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குள் அமைந்துள்ளது! இதுவே சைவம் மற்றும் வைணவம் சந்திக்கும் அபூர்வ சான்றாகும்.
புராணக் கதையின்படி, வைகுண்டத்தில் திருமாலும் மகாலட்சுமியும் “அழகில் யார் மேலானவர்?” என்ற வாதத்தில் ஈடுபட்டனர். மகாலட்சுமி அழகில் கர்வம் கொண்டதாக எண்ணிய திருமால், அவருக்கு அரூபமாகும் சாபம் அளித்தார். அதிலிருந்து மீள்வதற்காக, நூறு தவங்களுக்கு சமமான பலன் தரும் தலத்தில் தவம் செய்யும்படி கூறினார்.
மகாலட்சுமி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் தவம் செய்து, முன்பை விட அதிக அழகுடன் மீண்டும் தோன்றினார். அந்த அழகை ‘கள்ளமாக’ ரசித்த பெருமாளுக்கு “கள்வப் பெருமாள்” என்ற திருநாமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தலத்தில் அம்மனே பிரதான தெய்வமாக இருப்பதால், பெருமாளுக்கான தனி பூஜைகள், உற்சவங்கள், பிரம்மோற்சவங்கள் எதுவும் நடத்தப்படுவதில்லை. காமாட்சி அம்மனுக்காக தயாராகும் தயிர் சாதமே பெருமாளுக்கும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. அம்மனுக்குப் பூஜை செய்யும் அர்ச்சகர்களே பெருமாளுக்கும் பூஜை செய்கிறார்கள்.
திருமங்கையாழ்வார் மட்டுமே இத்தலத்திற்கு மங்களாசாசனம் செய்துள்ளதால், இது திவ்யதேசங்களில் 55வது தலமாக அடையாளம் பெற்றுள்ளது. முக்கிய விழாக்களாக வைகுண்ட ஏகாதசி மற்றும் நவராத்திரி மட்டுமே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. திருக்கள்வனூரில் கள்வப் பெருமாளையும், காமாட்சி அம்மனையும் சேர்ந்து வணங்கினால், அண்ணன்-தங்கை உறவு சிறப்பாக அமையும் என்ற ஐதீகம் நிலவுகிறது. இதுவே, இந்த தலத்தை குடும்ப பந்தங்களுக்கான அரிய அருள்தலம் ஆக்குகிறது.
Read more: எம்பி கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் மீது பரபர புகார்..!! பின்னணி என்ன..?