உலகிலேயே தந்தையை வேவு பார்த்த ஒரே மகன் அன்புமணி தான் என்று ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே பாமக நிறுனரான ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே அதிகார போட்டி தீவிரமடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரியில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மோதல் வெளியே வந்தது. இதனையடுத்து பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தான் தான் பாமகவின் தலைவர் என அறிவித்தார். ஆனால் அன்புமணியோ பாமக தலைவராக தான் நீடிப்பதாகவும் பொதுக்குழுவால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தொண்டர்களை சந்திக்கும் வகையில் அன்புமணி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராமதாசும் மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இரு தரப்பிற்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தனது தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ராமதாஸ்.. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனது வீட்டில் ஒட்டுகேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.. சென்னை ஆழ்வார்பேட்டையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ எனது தைலாபுரம் வீட்டில் ஒட்டுகேட்பு கருவி வைத்தது அன்புமணி தான்.. உலகிலேயே தந்தையை வேவு பார்த்த ஒரே மகன் அன்புமணி தான்.. அன்புமணி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பொய்யை சொல்லி வருகிறார்..
நான் வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சியை யாராலும் உரிமை கோர முடியாது.. பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றால் 15 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும்.. அன்புமணி அறிவித்துள்ள பாமக பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதமானது ” என்று கடுமையாக விமர்சித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் பூம்புகார் மகளிர் மாநாட்டில் 3 லட்சம் பெண்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறினார்..