திருநெல்வேலியைச் சேர்ந்த அல்போன்ஸ் (35) என்பவர் பெங்களூரு, கே.பி. அக்ராகரம் பகுதியில் ஒரு மிச்சர் கம்பெனி நடத்தி வந்தார். அதே கம்பெனியில் மாஸ்டராகப் பணிபுரிந்த கே.பி. அக்ரகாரத்தைச் சேர்ந்த பவன்குமார் (19) என்பவருக்கும், உரிமையாளர் அல்போன்ஸின் மனைவி சத்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.
இந்த கள்ளக்காதல் விவகாரம் 4 மாதங்களுக்கு முன்பு அல்போன்ஸுக்குத் தெரிய வந்ததையடுத்து, பவன்குமார் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். அதன் பிறகு, அவர் திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு, மரிமாணிக்குப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி வந்தார். இருப்பினும், சத்யாவும் பவன்குமாரும் செல்போன் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.
தன் மனைவியின் கள்ளக்காதல் தொடர்ந்து தொடர்பில் இருப்பதை தெரிந்து ஆத்திரம் அடைந்த அல்போன்ஸ், சத்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சத்யா இது தொடர்பாக பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரணை நடந்த போதும், அல்போன்ஸின் கோபம் தணியவில்லை.
இதனால், பவன்குமாரை தீர்த்துக் கட்ட அவர் திட்டம் தீட்டினார். அதன்படி, பவன்குமாரின் தம்பி சந்தோஷ்குமாரை (17) காரில் கடத்திச் சென்ற அல்போன்ஸ், மிட்டூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து அவரை தாக்கி துன்புறுத்தியுள்ளார். அவரது கையையும் உடைத்தவர்கள், பவன்குமார் இருக்கும் இடத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
பின்னர், திட்டமிட்டபடி நேற்று (அக். 1) நண்பன் பார்த்திபன் உட்பட 3 பேருடன் அல்போன்ஸ், கடத்திச் சென்ற சந்தோஷ்குமாரை அழைத்துக் கொண்டு பவன்குமாரின் பாட்டி வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, சந்தோஷ்குமாரை கதவைத் தட்டிய நிலையில் கதவைத் திறந்த பவன்குமாரின் தாய் மீராபாய், மகனைக் கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில், மறைந்திருந்த அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் திடீரென வீட்டுக்குள் நுழைந்தனர்.
பின்னர், பவன்குமாரை பிடித்து கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய பவன்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அல்போன்ஸால் தாக்குதலுக்கு உள்ளான சந்தோஷ்குமார் தற்போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Read More : இதை கவனிச்சிருக்கீங்களா..? ரயில் நிலையங்களில் மெடிக்கல் ஷாப் ஏன் இல்லை..? பலருக்கும் தெரியாத தகவல்..!!