தகைசால் தமிழர் நல்லகண்ணு மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு..! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

CPI Nallakannu

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்..


நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் நல்லகண்ணு மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்“ விடுதலைப் போராட்டம் தொடங்கி, தீண்டாமை ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என சமூகச் சீர்திருத்த போராட்டங்களில் தன் வாழ்நாளெல்லாம் உழைக்கும் மக்களுடன் தோளோடு தோள் நின்ற முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – தகைசால் தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு செவ்வணக்கம்! தியாகங்களும் போராட்டங்களும் நிறைந்த பெருவாழ்வுக்கு சொந்தக்காரரான அவரது புகழ் இத்தமிழ் நிலத்தில் என்றும் நிலைத்திருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்..

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சுதந்திரப் போராட்டத் தியாகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லக்கண்ணு அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தனது101 வயது வரை பொதுவாழ்வில் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர். தான் கொண்ட கொள்கையிலும், நடைமுறை வாழ்விலும் தன் இறுதி மூச்சு வரை சமரசம் இன்றி வாழ்ந்தவர்.

தமிழகத்தில் மட்டுமல்லாது, அகில இந்திய அளவில் மிக மூத்த பொதுவுடைமைத் தலைவர். தனது15 வயது தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் என அனைவரது உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் அயராது போராடி வெற்றி கண்டவர். அரசியல் கட்சிகளை தாண்டி அனைவரும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். வெள்ளையர்களிடமிருந்து இந்தியாவை மீட்கும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர். நெல்லை சதி வழக்கு உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டு, 7 ஆண்டுகள் சிறை, 4 ஆண்டுகள் தலைமறைவு என நாட்டுக்காக பல இன்னல்களை தீரத்துடன் எதிர்கொண்டவர். சுற்றுச்சூழலை மாசுபடுத்திய ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காகவும், தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுப்பதற்காகவும் களப் போராட்டத்தில் மட்டுமின்றி, நீதிமன்றத்திலும் போராடி வெற்றி கண்டவர்.

சுதந்திர இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடுகள், வன்கொடுமைகள், ஆணவக் கொலைகள் ஆகியவற்றை எதிர்த்து தனது இறுதி மூச்சுவரை போராடிய தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும். அவரது அர்ப்பணிப்பை போற்றும் வகையில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்தார். மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தோழருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி அவரது பெருமைக்கு மேலும் புகழ் சேர்த்தார். தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்கு அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் நினைவு எப்போதும் சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பொதுவுடமை இயக்க தலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “ சுதந்திரப் போராட்ட வீரர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் R. நல்லகண்ணு அவர்கள் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய அவரது சேவை என்றும் நினைவுகூரப்படும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினர் மற்றும் தோழமைகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஐயா திரு. நல்லக்கண்ணு அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக தமது 101-வது வயதில் இயற்கை எய்தினார் என்ற தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் ஐயா திரு. நல்லக்கண்ணு அவர்கள். அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்!” என்று தெரிவித்துள்ளார்.

Read More : மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முழு அரசு மரியாதை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..! அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை என புகழஞ்சலி..!

RUPA

Next Post

BREAKING | 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை..!! நடிகர் சரத்குமார் அதிரடி அறிவிப்பு..!!

Wed Feb 25 , 2026
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான திருப்பமாக, 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார். 3 தசாப்தங்களுக்கும் மேலாகத் தன்னோடு நிழலாகத் தொடர்ந்து வரும் விசுவாசமிக்கத் தொண்டர்களுக்கும், கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கும் வாய்ப்பளிப்பதே காலத்தின் கட்டாயம் என்று அவர் கூறியுள்ளார். கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் தன்னை முழுமையாக […]
Sarathkumar 2026

You May Like