இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் கும்பகோணம் அருகே தாராசுரம் மைதானத்தில் ’சிறுபான்மை உரிமையை காப்போம்’ எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இந்திய யூனியன் முஸ்லீம் மாநாட்டில் பங்கேற்றதில் பெருமைப்படுகிறேன். பூரிப்படைகிறேன்.. தைக்சால் தமிழர் பேராசிரியர் காதர் மொய்தீன் எப்போது எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் மறுத்ததில்லை வந்துவிடுவேன்..
இஸ்லாமியர்களுக்கு திமுக ஆட்சியில் ஏராளமான நன்மைகள் செய்யப்பட்டுள்ளன.. இஸ்லாமியர்கள் வேறு தான் வேறு என்று கலைஞர் ஒருபோதும் நினைத்ததில்லை.. கலைஞர் வழியில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்..
மேலும் இந்த மாநாட்டில் புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.. அப்போது “ தமிழ்நாடு உலமாக்கள் வாரியத்தில் பதிவு பெற்ற உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,000ஆக உயர்த்தப்படும். உலமாக்கள் நலவாரியத்தில் உள்ள 1,000 பேருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் மானியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.50,000ஆக உயர்த்தப்படும்.
சென்னை, மதுரையில் வக்ஃப் தீர்ப்பாயம் செயல்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் மேலும் ஒரு வக்ஃப் தீர்ப்பாயம் வழங்கப்படும். கல்லறை தோட்டம் இல்லாத இடங்களில் மாநகராட்சிகளால் அரசு இடம் தேர்வு செய்யப்பட்டு அவை அமைக்கப்படும். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இருக்கக்கூடிய 10 உருதுமொழி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்..
இஸ்லாமியர்களின் மீதியிருக்கும் கோரிக்கைகளும் படிப்படியாக ஆனால் உறுதியாக நிறைவேற்றப்படும்.. மீண்டும் மீண்டும் திராவிட மாடல் அரசு தொடர வேண்டும் என்று நீங்கள் போட்ட தீர்மானங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. உங்கள் நம்பிக்கையை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காப்பாற்றுவான் என்று உறுதியை அளிக்க விரும்புகிறேன்..” என்று தெரிவித்தார்.



