கன்னியாகுமரி மற்றும் நாகர்கோயில் செல்லும் பக்தர்கள் தவறாமல் தரிசிக்கும் புண்ணியஸ்தலமாக “முப்பந்தல் இசக்கியம்மன்” கோயில் திகழ்கிறது. இதன் தோற்ற வரலாறு மன்னர்கள் காலம் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது, திருநெல்வேலி – நாகர்கோயில் சாலையில் உள்ள காவல்கிணறு ஊரில் மூன்று பந்தல்கள் அமைத்து, அதில் இசக்கியம்மனையும் தமிழ் புலவர் அவ்வையாரையும் அம்மனாகக் கருதி வழிபட்டனர்.
தல வரலாறு: பொதுவாக கிராமங்களில் ஏதேனும் பிரச்சனை என்றால் ஒரு பெரிய ஆலமரத்தடியில் அமர்ந்து ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்து கூட்டி பேசித் தீர்ப்பது வழக்கம். அதேபோல் மன்னர்கள் காலத்திலும் இந்த பஞ்சாயத்து கூட்டி பிரச்சனைகளை தீர்க்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. குறிப்பாக சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் தங்கள் பிரச்சனைகளை பேசி தீர்ப்பதற்காக கூட்டம் நடத்துவதற்கு திருநெல்வேலி – நாகர்கோயில் சாலையில் உள்ள காவல்கிணறு என்னும் ஊரில் மூன்று பந்தல்கள் அமைத்திருந்தனர்.
இந்தப் பந்தலில் இசக்கியம்மனையும், தமிழ் புலவரான ஔவையாரை அம்மனாகவும் பாவித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அவர்கள் முன்னிலையில் தங்கள் பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. காலம் சென்ற நிலையில் பாண்டிய மன்னரால் இசக்கியம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. பந்தல் அமைத்து அம்மனை வழிபட்ட ஸ்தலம் என்பதால் இந்த இடம் முப்பந்தல் என அழைக்கப்படுகிறது.
இங்கு இசக்கியம்மனுடன் கல்யாணியம்மனும், விநாயகர், வைஷ்ணவி, பாலமுருகன், சுடலைமாடசுவாமி, பட்டவராயர் மற்றும் அவ்வையார் ஆகியோருக்கும் தனித் தனி சன்னதிகள் உள்ளன. சிறப்பு வழக்கமாக, முதலில் அவ்வையார் அம்மனுக்கு பூஜை நடத்தி பின்னர் இசக்கியம்மனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது.
காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் இக்கோயிலில், பங்குனி மாத செவ்வாய்களில் திருவிளக்கு பூஜை, தை மாத கடைசி செவ்வாயில் புஷ்பாபிஷேகம், ஆனி உத்திரத்தில் வருடாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும் திரளான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
குழந்தைப்பாக்கியம், திருமண தடைகள், உடல்நல குறைபாடுகள் நீங்கும் என்பதில் பக்தர்கள் உறுதியான நம்பிக்கையுடன் வருகின்றனர். குறிப்பாக உடல்நல பிரச்சினை உள்ளவர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம் போன்ற உலோகங்களால் உடல் வடிவம் செய்து சமர்ப்பித்தால் நோய்கள் குணமாகும் என்பது பாரம்பரிய நம்பிக்கையாகும். பக்தர்கள் அலைமோதும் இந்த தலத்திற்கு சென்று வழிபடுபவர்களுக்கு, ஆரோக்கியம், வளம், குடும்ப முன்னேற்றம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கையாக கூறப்படுகிறது.
Read more: வாஸ்துப்படி பூஜை அறையில் தீப்பெட்டி வைக்கலாமா..? எங்கு வைக்க கூடாது..?