அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சமீபத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பரபரப்பை கிளப்பினார். அரசியல் அனுபவம் மிக்க செங்கோட்டையனின் வரவு, கட்சிக்குப் பலம் சேர்க்கும் என்று கருதும் விஜய், அவருக்கு உச்சபட்ச மரியாதையை அளித்து வருகிறார்.
மறைந்த விஜயகாந்தின் கட்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன் எப்படி முக்கிய மையமாக இருந்தாரோ, அதேபோல தனது அரசியல் நடவடிக்கைகளுக்குச் செங்கோட்டையனை மையப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை விஜய் நினைத்தால் மட்டுமே அவரை சந்திக்க முடியும் என்ற நிலை மாறி, தற்போது செங்கோட்டையன் தன்னுடன் நேரடியாக தொடர்புகொண்டு பேசலாம் என்று விஜய் அனுமதி வழங்கியுள்ளார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய பின்னரே கட்சியில் சேர செங்கோட்டையன் விரும்பியதாகவும், ஆனால் ஊடகங்களின் கவனம் அதிகமாக இருக்கும் என்பதால், கட்சியில் இணைந்த பிறகு செல்லலாம் என்று விஜய் தரப்பில் இருந்து ஆலோசனை கூறப்பட்டதாகவும் தெரிகிறது.
செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, “கட்சியில் இல்லாத ஒருவரைப் பற்றிப் பேச மாட்டேன்” என்று பதிலளித்தார். இதன் தொடர்ச்சியாக, இபிஎஸ் ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் அடுத்த கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
செங்கோட்டையன் அந்தப் பகுதியில் செல்வாக்கு இல்லாதவர் என்று நிரூபிக்கும் வகையில், தனது கூட்டத்தில் வழக்கமான கூட்டத்தைவிட 3 மடங்கு அதிக கூட்டத்தைக் கூட்டும்படி நிர்வாகிகளுக்குக் கட்டளையிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பிரச்சாரத் திட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், செங்கோட்டையனும் கோபிசெட்டிபாளையத்திற்கு நடிகர் விஜய்யை அழைத்து வந்து மக்கள் சந்திப்பை நடத்த முடிவெடுத்து, அதற்கான சம்மதத்தை விஜய்யிடம் பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒழுங்குபடுத்தப்படாத கூட்டம் என்று விமர்சிக்கப்படும் விஜய்யின் பொதுக்கூட்டங்களை, ஒழுங்குபடுத்தி, கட்டுக்கோப்பான தொண்டர் கூட்டமாக நிரூபிக்க, செங்கோட்டையன் இந்தப் பிரச்சாரத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்திற்குச் சென்றபோது அவருக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்த அதிமுகவினர் கலக்கத்தில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



