அஜித்திற்கு கஞ்சா கொடுத்து போலீசார் அடித்தனர் என்று அவரின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. மேலும் மாவட்ட நீதிபதியும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். 2 நாட்களாக மதுரை மாவட்ட நீதிபதி இதுகுறித்து சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த வழக்கு தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. ஒருபுறம், அஜித் மீது புகாரளித்த நிகிதாவே மிகப்பெரிய மோசடி பேர்வழி என்பது தெரியவந்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பலரை ஏமாற்றி அவர் ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகிதா அளித்த நகை திருட்டு புகார் உண்மை தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் நிகிதா தனது தாயாருடன் தலைமறைவாகி விட்டதாக வெளியாகி உள்ள தகவல் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
இந்த நிலையில் அஜித்தின் நண்பர் மனோஜ் பாபு, சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். பிரபல செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ அஜித்தை போலீசார் தாக்கும் போது நான் அருகில் தான் இருந்தேன்.. அவரிடம் பேசிய போது அவர் மீது கஞ்சா வாசனை வந்தது.. அஜித்திற்கு கஞ்சா கொடுத்து போலீசார் அடித்தனர்.. அஜித் தண்ணீர் கேட்டார்.. முதலில் தண்ணீர் கொடுத்த மறுத்தனர். பின்னர் நீரில் மிளகாய் பொடி கலந்து அஜித்துக்கு கொடுத்தனர். முகத்திலும் மிளகாய் பொடியை தடவினர்.. இதை எல்லாம் நான் கண்ணால் பார்த்தேன்..
நான் அருகில் தான் இருந்தேன்.. இதெல்லாம் மாட்டுத் தொழுகையில் தான் நடந்தது.. பல்ஸ் பிடித்து பார்த்த போது நாடித்துடிப்பு எதுவுமே இல்லை.. நெஞ்சில் கை வைத்து பார்த்த போது இதயத்துடிப்பும் இல்லை.. அங்கேயே அவர் மலம் கழித்துவிட்டார். அதன்பின்னரே காவலர்கள் அவரை ஆட்டோவில் அழைத்து சென்றனர்.. ” என்று தெரிவித்துள்ளார்.