புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரைப் பகுதியில் பாலியல் வன்கொடுமை, பணம் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை தடுக்க, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடலோரப் போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு கடற்கரைப் பகுதியில் நடந்த ஒரு பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி என்ன..?
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கடற்கரைக்கு வந்த ஒரு இளம் காதல் ஜோடியை, அப்போதைய ரோந்துப் பணியில் இருந்த போலீஸ்காரர் ராஜ்குமார் (35) என்பவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த போலீஸ் பூத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, உடன் வந்த காதலனை அருகில் கடைக்குச் சென்று தண்ணீர் வாங்கி வரச் சொல்லி அனுப்பிவிட்டு, காதலியான இளம் பெண்ணை மிரட்டிப் பணம் கேட்டதாகவும், அத்துடன் அவர் மீது கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக அந்தக் காதல் ஜோடி தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, உறவினர்களும் நண்பர்களும் அங்கு விரைந்து வந்து போலீஸ் பூத்தை முற்றுகையிட்டனர். இதனால் போலீஸாருக்கும் உறவினர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.
சம்பவம் நடந்த சில வாரங்களுக்குப் பிறகு, அப்போதைய மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ்காரர் ராஜ்குமாரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதன்பிறகு, இது தொடர்பான துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. தற்போது இந்த விசாரணையின் முடிவில், காவலர் ராஜ்குமார் இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியது மற்றும் சில்மிஷத்தில் ஈடுபட்டது உண்மை என நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, ராஜ்குமாரை நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு காவலரே இது போன்ற மோசமான சம்பவத்தில் ஈடுபட்டது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



