கோவையில் காவலர் பல பெண்களுடன் தகாத உறவில் இருப்பதாக அவரது மனைவி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்த சந்தியா தேவி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவலர் ஆறுமுகம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் ஆறுமுகம் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதை அறிந்த சந்தியா தேவி தனது கணவரிடம் இதுகுறித்து வினவியபோது, அவர் அவர்களை எல்லாம் தனது நண்பர்கள் என்று கூறிச் சமாளித்துள்ளார்.
இந்நிலையில், மற்றொரு பெண், சந்தியா தேவியைத் தொடர்புகொண்டு, ‘தானும் ஆறுமுகமும் கடந்த 10 மாதங்களாகக் காதலித்து வருவதாக’ கூறி, இருவரின் தனிப்பட்ட புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியா தேவி, தனது கணவர் ஆறுமுகம் திருமணமானவர் என்ற உண்மையைப் பல பெண்களிடமும் மறைத்துத் தொடர்பில் இருந்ததும், அவர்களுடன் உல்லாசமாக இருந்து தனிமையில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதும் அம்பலமானது.
இதையடுத்து, சந்தியா தேவி கோவை டிஐஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனது கணவர் ஆறுமுகம் பல பெண்களை காதல் வலையில் வீசி ஏமாற்றி உல்லாசம் அனுபவிப்பதாகவும், அவரது அச்சுறுத்தலுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அந்தக் கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



