தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மீண்டும் எப்போது பிரச்சாரம் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கரூரில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் காரணமாக பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தியிருந்த நிலையில், கட்சியின் எதிர்காலத் திட்டம் குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சோக நிகழ்வு, விஜய்யின் பிரச்சார பயணத்தை உடனடியாக நிறுத்தக் காரணமாக அமைந்தது. இந்தச் சம்பவத்தின் பாதிப்பில் இருந்து அவர் இன்னும் முழுமையாக மீளவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புக் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தனது அரசியல் பயணம் இன்னும் வேகமெடுக்கும் என்றும், தி.மு.க. மீதான தனது கடுமையான விமர்சனத்தைத் தொடர்ந்தும் பதிவு செய்தார்.
சென்னையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், விஜய்யிடம் ஒரு முக்கியக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அவர் ஏற்கனவே நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் செய்துவிட்ட நிலையில், அருகிலுள்ள முக்கிய நகரமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கை.
நிர்வாகிகளின் இந்த விருப்பத்திற்கும், கோரிக்கைக்கும் விஜய் சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, த.வெ.க. தலைவர் விஜய் சேலத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய கட்சி நிர்வாகிகள் ஆயத்தமாகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, அவர்கள் தங்கள் விருப்பத்தை உறுதி செய்தனர். “கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் இருந்து தலைவர் இன்னும் மீளவில்லை. இருப்பினும், சென்னையில் நடந்த கூட்டத்தில் சேலத்தில் இருந்து மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தைத் தெரிவித்தோம். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்” என்று அவர்கள் கூறினர்.
“ஆனால், எப்போது பிரச்சாரத்தைத் தொடங்குவது என்பதை கட்சித் தலைமை மற்றும் பொதுச்செயலாளர்தான் முடிவு செய்வார்கள். தலைமை அறிவித்தவுடன், அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்வோம்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சேலத்தில் பொதுக்கூட்டத்தை எந்த இடத்தில் நடத்துவது, அதற்குத் தேவையான போலீஸ் அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து நிர்வாகிகள் விரைவில் சேலத்திற்கு வந்து ஆலோசனை வழங்குவார்கள் என்றும், அதற்கான தகவல் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.



