செஞ்சியில் நடைபெற்ற தவெக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாவட்ட செயலாளரை கண்டித்து கட்சி நிர்வாகிகள் திடீரென விஜய் படத்தை தூக்கி எறிந்து காலால் மிதித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுச்செயலாளர் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு அடுத்த மாதம் 25ஆம் தேதி மதுரையில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மாநாட்டை நடத்த தவெக தலைவர் விஜய் முடிவு எடுத்துள்ளார். இதற்கான பணிகளை தவெக நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தவெக செயற்குழு கூட்டத்தில் கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டது. இதற்காக பிரத்யேக செயலி ஒன்றையும் தவெக தலைமை வடிவமைத்திருப்பதாக கூறப்பட்டது. விரைவில் அதனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வந்தது. அதன்படி ஜூலை 20ஆம் தேதி தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக தவெக மாவட்டச் செயலாளர்கள் தயாராகி வந்தனர். இந்த கூட்டத்தில் மதுரை மாநாடு ஏற்பாடுகள் மற்றும் விஜயின் சுற்றுப்பயணம் ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட இருந்ததாக கூறப்பட்டது. அதேபோல் மதுரை மாநாட்டில் என்னென்ன விஷயங்கள் பேசப்பட வேண்டும், தொண்டர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும் சில அறிவுறுத்தல் அளிக்கப்படவிருந்தன. ஆனால் எதிர்பாராத விதமாக, தவெக தலைமை வடிவமைத்த புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் புதிய செயலி அறிமுக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் செஞ்சியில் நேற்று முன் தினம் விழுப்புரம் வடமேற்கு மாவட்ட தவெக சார்பில் கொள்கை விளக்க பொது கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை வழங்கியபின் ஆனந்த் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு சென்ற மேல்மலையனூர் ஒன்றிய துணை செயலாளர் சரண்ராஜ் நிர்வாகிகளுடன் கூட்ட மேடை அருகே வந்து தங்களுக்கு மரியாதை தராத மாவட்ட செயலாளரை கண்டித்து அவர் அணிந்திருந்த கட்சித் துண்டையும், விஜய் படத்தினுடைய அட்டையையும் தூக்கி எறிந்தார். அவரது ஆதரவாளர்கள் விஜய் படத்தை காலால் மிதித்து போராட்டம் நடத்தினர். அப்போது நிர்வாகி சரண்ராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், 10 ஆண்டாக உழைத்தோம்.
இப்ப வந்தவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்து உள்ளீர்கள். ஆனால் மாவட்ட செயலாளர், அனைவரையும் அரவணைத்து செல்லாமல் தனியாக செயல்படுகிறார் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பொது செயலாளர் ஆனந்த் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறினார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகளிடையே இதுபோன்ற கோஷ்டி மோதல் ஏற்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.