சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படும் காதல், சில சமயங்களில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜின்னு பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் குமாரி (37). அங்கன்வாடி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த இவர், தனது கணவரை விவாகரத்து செய்த பின் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், பர்மா நகரைச் சேர்ந்த ஆசிரியர் மனாராம் என்பவருடன் முகேஷ் குமாரிக்கு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசியுள்ளனர்.
முகேஷ் குமாரி மனாராமை திருமணம் செய்துகொள்ள விரும்பிய நிலையில், மனாராம் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். கடந்த ஓராண்டாக இந்த விவகாரம் நீடித்ததால், முகேஷ் குமாரி நேரடியாக தனது காரில் சுமார் 600 கிலோமீட்டர் பயணம் செய்து மனாராமை தேடிச் சென்றுள்ளார்.
மனாராமின் வீட்டை அடைந்த முகேஷ் குமாரி, அவரது குடும்பத்தினரிடம் தங்கள் உறவை பற்றி கூறியுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த மனாராம், முகேஷ் குமாரியை தனது காரில் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்று, இரும்புக் கம்பியால் அவரது தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், உடலை முட்புதரில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றார்.
முட்புதரில் கிடந்த உடலை பார்த்த பொதுமக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர், போலீசார் விசாரணையின்போது, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மனாராம் தான் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : நீங்க இந்த அட்டையை வாங்கிட்டீங்களா..? மிஸ் பண்ணிடாதீங்க..!! ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம்..!!