மனித வாழ்வில் நம்பிக்கை என்பது அவனது உயிர் மூச்சைப் போன்றது. வாழ்க்கையின் சிக்கல்களில் வழிகாட்டும் ஒளியாக, தெய்வ நம்பிக்கை நம் சமூகத்தின் அடித்தளமாக மாறியுள்ளது. நம்பிக்கையை நனவாக்கும் தலங்களே மக்கள் மனதில் புனித இடங்களாக மதிக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல ஊர்களில் அத்தகைய தலங்கள் எண்ணற்றவை; அவற்றில் சமீப காலமாக மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பனங்காடு மாரியம்மன் கோயில் ஆகும்.
இது ஒரு சாதாரண ஆலயம் அல்ல.. நம்பிக்கையும், வரலாறும், ஆன்மீக அர்ப்பணிப்பும் ஒன்றிணைந்த தலமாக இது விளங்குகிறது. நஞ்சை மகத்து வாழ்க்கை கிராமத்தில் அமைந்துள்ள பனங்காடு, முன்னர் “பாணிகாடு” என அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இங்கிருந்து வெட்டப்பட்ட சுனைகளின் நீர் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதால், “பாணி (தண்ணீர்) காடு” என அழைக்கப்பட்டது. காலப்போக்கில், மொழி வழக்கில் “பனங்காடு” என பெயர் மாறியது.
இந்த ஊரின் ஆன்மிக அடையாளத்தை உருவாக்கியவர் அம்பலவாணன் படையாட்சி. சிங்கப்பூரில் கடின உழைப்பின் மூலம் செல்வம் சேர்த்த அவர், “கோயில் இல்லா ஊரில் குடியிருக்கக் கூடாது” என தன் சொந்த செலவில் மாரியம்மன் சன்னதியை எழுப்பினார். அதன் காரணமாக இக்கோயில் இன்று வரை “சிங்கப்பூரார் கோயில்” என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்தின் மிகப்பெரிய அதிசயம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில், மாரியம்மனும் விநாயகரும் சிலைகளின் மீது சூரிய ஒளி நேரடியாகப் படும் நிகழ்வு. இதனை கோயில் பண்டிகையின் முக்கிய நிகழ்வாகக் கருதுகிறார்கள். மேலும், குழந்தைப்பேறு வேண்டுதல், திருமணத் தடைகள், உடல்நல பிரச்சனைகள், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் போன்ற விருப்பங்களுடன் பலர் இங்கு வழிபடுகின்றனர். அத்துடன், பலர் தங்களது வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் நனவான அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர்.
ஒரு சிறு ஊரில் தொடங்கிய கோயில் இன்று பக்தர்களின் பெரும் நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் பெற்றுள்ளது. பனங்காடு மாரியம்மன் கோயில், நம்பிக்கை வைத்தால் அதிசயம் நிகழும் இடமாக மாறியுள்ளது. சமூகத்தின் பல நிலைகளில் நம்பிக்கை குறைந்து வரும் இக்காலத்தில், இத்தகைய தலங்கள் மக்களின் மன உறுதியை மீண்டும் எழுப்புகின்றன.
Read more: Breaking : கரூர் துயரம்.. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்! தீர்ப்பு ஒத்திவைப்பு..