கர்நாடகாவை சேர்ந்த மோனிகா என்ற பெண், தனது முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு, சாந்தன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். சமூக வலைதளங்களில் அதீத ஆர்வம் கொண்ட மோனிகா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் பதிவிட்டு வந்துள்ளார். இந்தச் சூழலில், சமூக வலைதளம் வாயிலாக ராகவேந்திரா என்ற காவலருடன் மோனிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது.
தனது போலீஸ் காதலன் ராகவேந்திராவுடன் சேர்ந்து வாழத் திட்டமிட்ட மோனிகா, அதற்காக தனது கணவர் சாந்தனை வழக்கில் சிக்க வைக்க ஒரு தந்திரமான திட்டத்தைத் தீட்டினார். அதன்படி, சாந்தனின் வீட்டில் கஞ்சா அல்லது திருட்டுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்து, அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தார்.
கணவர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட மோனிகா, வீட்டில் இருந்த நகை மற்றும் பெருமளவு பணத்தைச் சுருட்டிக்கொண்டு தனது காதலன் ராகவேந்திராவுடன் தலைமறைவாகிவிட்டார்.
விசாரணையில் தான் நிரபராதி என்பது தெரிந்த பிறகு வீடு திரும்பிய சாந்தன், மனைவி நகைகளுடன் தப்பியோடியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள மோனிகா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவலர் ராகவேந்திரா ஆகிய இருவரையும் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
Read More : ரேஷன் கடைகளில் பெண்களுக்கு இலவச நாப்கின்..? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!



